
இந்தியா மீது கணிசமாக வரி உயர்த்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை(ஆக. 4) அறிவித்துள்ளார்.
முன்னதாக, இந்திய பொருள்கள் மீதான வரியை இறுதிசெய்து கடந்த ஜூலை 30 அறிவித்தார் டிரம்ப். அதன்படி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீதம் வரியும் அத்துடன் அபராதமாக கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7 முதல் இந்த நடவடிக்கை அமலாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவுடன் வர்த்தகம் செய்வதால் இந்தியா மீது அபராதமாக கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. ரஷியாவிடமிருந்து எரிபொருள், ராணுவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதே மேற்கண்ட கூடுதல் வரி விதிப்புக்கு வித்திட்டுள்ளது.
இந்தநிலையில், இது குறித்து தமது சோஷியல் ட்ரூத் சமூக தளத்தில் குறிப்பிட்டுள்ள டிரம்ப், “ரஷியாவிலிருந்து அதிகளவு எண்ணெயை மட்டும் இந்தியா வாங்கவில்லை. அதனைத்தொடர்ந்து, வெளிச்சந்தையில் பெரும் லாபத்துக்காக விற்பனை செய்கிறது.
ரஷியாவால் உக்ரைனில் எத்தனை மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதைக் குறித்து அவர்களுக்கு (இந்தியா) கவலையேயில்லை. இதன் காரணமாகவே, நான் இந்தியா மீதான வரியை கணிசமாக உயர்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும், இந்திய பொருள்களுக்கு அமெரிக்காவில் அவர் ஏற்கெனவே விதித்துள்ள வரியான 25 சதவீதத்துடன் இன்னும் கூடுதலாக எவ்வளவு வரி விதிக்கப் போகிறார் என்பதை அவர் இன்னும் தெளிவுபடுத்தவில்லை.
எனினும், இதன் தாக்கம் இந்தியாவின் ஜிடிபியில் 0.2 சதவீதத்துக்கு மிகாமல் இருக்கும் என்றே பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர். ஆகையால், அமெரிக்க அரசின் கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தில் பெரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை என்று சொல்லப்படுகிறது.
உலகளவில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. கடந்த காலங்களில் மத்திய கிழக்கிலிருந்து அதிகளவு எண்ணெயை இறக்குமதி செய்த இந்தியா, அதன்பின், 2022-இல் உக்ரைனில் ரஷியா படையெடுப்பை தொடங்கியபின், மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடை நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட ரஷியா, தள்ளுபடி விலையில் எண்ணெய் வர்த்தகத்துக்கு அழைப்பு விடுத்தது. இதனைத்தொடர்ந்து அதிகளவு எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டது.
இதனிடையே, உக்ரைனுடனான சண்டை நிறுத்தத்துக்கு ரஷியாவை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ரஷிய அதிபர் புதின் இழுபறி பாணியை கடைப்பிடிப்பதால் டிரம்ப் கடும் விரக்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரஷியா மீது கடும் நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்து வருகிறார். அதன் வெளிப்பாடாக, இந்தியா மீதான கூடுதல் வரி விதிப்பும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.