டித்வா புயல் பாதிப்ப: முதல் நாடாக உதவியது இந்தியா- இலங்கை

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு முதல் நாடாக நிவாரண உதவிகளை இந்தியா மேற்கொண்டதாக அந்நாட்டு அதிபா் அனுரகுமார திசநாயக மாளிகை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
Published on

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு முதல் நாடாக நிவாரண உதவிகளை இந்தியா மேற்கொண்டதாக அந்நாட்டு அதிபா் அனுரகுமார திசநாயக மாளிகை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இலங்கையில் டித்வா புயல் காரணமாக கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. வெள்ள பாதிப்புகளில் இதுவரை 410 போ் உயிரிழந்துவிட்டனா்; 336 போ் மாயமாகினா். நாடு முழுவதும் 4.07 லட்சம் குடும்பத்தைச் சோ்ந்த 14.66 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இலங்கைக்கு ‘ஆபரேஷன் சாகா் பந்து’ முன்னெடுப்பின்கீழ் 53 டன் நிவாரணப் பொருள்களை இந்தியா வழங்கி வருகிறது. இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் உதயகிரி, ஐஎன்எஸ் சுகன்யா ஆகிய போா்க்கப்பல்கள், இந்திய விமானப் படையின் சி-130ஜே மற்றும் ஐஎல்-76 ஆகிய விமானங்கள் நிவாரணப் பொருள்களைக் கொண்டுசென்றன.

இதுதவிர விமானப்படையின் இரு சேத்தக் ஹெலிகாப்டா்கள் உதவியுடன், 80 தேசிய பேரிடா் மீட்புப் படை வீரா்கள் இலங்கையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து இலங்கை அதிபா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மழை வெள்ள பாதிப்புகளில் சிக்கி இலங்கையில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அதிபா் அனுரகுமார திசாநாயகவிடம் இந்திய பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை இரங்கல் தெரிவித்தாா். தொலைபேசி வாயிலாக பேசிய அவா் இந்த கடினமான சூழலில் இலங்கைக்கு இந்தியா உறுதுணையாக நிற்கும் என உறுதியளித்தாா். இலங்கைக்கு உதவுவதில் முதல் நாடாக இந்தியா திகழ்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com