பேச்சுவார்த்தைக்குகூட யாரும் இருக்க மாட்டீர்கள்! ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை!
ரஷியாவுடன் ஐரோப்பிய நாடுகள் போரைத் தொடங்கினால் நாங்களும் தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷியா - உக்ரைன் இடையேயான போர் தொடங்கி நான்கு ஆண்டுகளை நெருங்கும் நிலையில், போரை நிறுத்தும் பணியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்துள்ளார்.
ரஷியா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் நேரடியாக போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்திய டிரம்ப், இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கான 28 அம்ச வரைவு அறிக்கையையும் வெளியிட்டார்.
ரஷியா கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் விட்டுக் கொடுக்க வேண்டும், நேட்டோ கூட்டமைப்பில் உறுப்பினராகும் முயற்சியை உக்ரைன் கைவிட வேண்டும் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த 28 அம்ச கோரிக்கைகள் உக்ரைனுக்கு எதிராகவும் ரஷியாவுக்கு சாதகமாகவும் இருப்பதாக ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும், அமெரிக்காவின் 28 அம்ச ஒப்பந்தத்தில் பல மாற்றங்களை முன்மொழிந்துள்ள ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள், உக்ரைன் மீது நியாயமற்ற அமைதி ஒப்பந்தத்தை திணிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சூழலில் மாஸ்கோவில் செய்தியாளர்களுடன் பேசிய புதின், ஐரோப்பிய தலைவர்களை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது:
”ரஷியா ஏற்றுக் கொள்ள முடியாத திருத்தங்களை தெரிவித்து அமைதிப் பேச்சுவார்த்தை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐரோப்பிய நாடுகள் திருத்தங்களை முன்மொழிந்துள்ளன.
ஐரோப்பிய நாடுகளுடன் போருக்குச் செல்ல நாங்கள் திட்டமிடவில்லை. ஆனால், ஐரோப்பிய நாடுகள் விரும்பினால், போரைத் தொடங்கினால், நாங்களும் தயாராக இருக்கின்றோம். சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தகூட யாரும் இல்லாத வகையில் முழுமையான தோல்வியை ஐரோப்பிய நாடுகள் சந்திக்கும்.
ஐரோப்பிய நாடுகளிடம் அமைதிக்கான திட்டங்கள் இல்லை. போரின் பக்கம் அவர்கள் உள்ளனர். போரை நிறுத்த முயற்சிக்கும் அமெரிக்காவின் திட்டத்தை சீர்குலைக்கின்றன.” எனத் தெரிவித்துள்ளார்.
There will be no one even for negotiations! Putin's warning to European countries!
இதையும் படிக்க : ரஷியா வசம் முக்கிய உக்ரைன் நகரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

