பலி கேட்கிறதா, பருவநிலை மாற்றம்? ஆபத்தில் ஆசிய நாடுகள்! ஆய்வாளர்கள் சொல்வதென்ன?

பருவநிலை மாற்றத்தால் உருவான புயல், வெள்ளத்தில் சிக்கி தெற்காசிய நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
Deadly Asian floods are no fluke. They’re a climate warning, scientists say
பருவநிலை மாற்றத்தால் நேரிட்ட புயல் - மழை பாதிப்புகள்...ஏ.பி.
Updated on
2 min read

தென்கிழக்கு ஆசிய நாடுகள், நிகழாண்டில் கடுமையான வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றத்தால் தாமதமாக உருவான புயல்களும் அதனிடையே பெய்த கனமழையும் கடுமையான பேரழிவுக்கு வழிவகுத்துள்ளன.

இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் நேரிட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 1,400-க்கும் அதிகமான உயிர்ப் பலிகளும் நேர்ந்துள்ளன. மேலும், நிலச்சரிவில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 'காணாமல்போன' நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் இன்னமும் நடைபெற்று வருகின்றன.

மலேசியாவும் கனமழையால் வெள்ளத்தை எதிர்கொண்டு இன்னும் அதிலிருந்து மீளாமல், மூன்று பேரைக் பலிகொடுத்துள்ள வேளையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி காணாமல்போய்விட்டனர்.

இதற்கிடையில், பிலிப்பின்ஸ் மற்றும் வியத்நாம் ஆகிய நாடுகள் கடந்த ஒரு வருடமாகவே தீவிர புயல் மற்றும் கனமழையை எதிர்கொண்டு வருகின்றன. இதனால், நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

புயல், வெள்ளம் ஆகியவை பருவநிலை மாற்றத்தின் இயல்புதான் என காலநிலை விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சன்வே சென்டர் ஃபார் பிளானட்டரி ஹெல்த் குழுவின் தலைவரான ஜெமிலா மஹ்மூத் கூறும்போது, “தென்கிழக்கு ஆசிய நாடுகள் அடுத்தாண்டும் (2026) அதைத் தொடர்ந்து, வரும் ஆண்டுகளிலும் இதேபோன்ற வானிலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்” என்கிறார்.

தீவிர காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் ஆசிய நாடுகள்

வளிமண்டலத்தில் வெப்பத்தைத் தக்கவைக்கும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு கடந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததே காலநிலை மாற்றத்திற்கான காரணம் என ஐக்கிய நாடுகள் அவையின் உலக வானிலை அமைப்பு கூறுகிறது.

உலகில் சராசரியைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வேகமாக வெப்பமயமாதல் அதிகரித்து வருவதால், ஆசிய நாடுகள் இத்தகைய பருவநிலை மாற்றங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கடல் மட்டம் உயர்வதும் அதிகளவிலான புயல்கள் உருவாகக் காரணம் என்றும், புவி வெப்பமயமாதலால் கடலின் வெப்பமும் அதிகரித்துப் புயல்களைத் தீவிரத் தன்மையுடன் வைத்திருப்பதாகவும் ஹாங்காங் நகர பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் பேராசிரியர் பெஞ்சமின் ஹார்டன் கூறுகிறார்.

பருவநிலை மாற்றத்தால் காற்று மற்றும் கடல்நீர் பாதிக்கப்படுவதாலே, ஓராண்டில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகின்றன. கடல்நீர் அதிக வெப்பமடைதல் என்று கூறப்படக் கூடிய எல் நினோ (El Nino) மாற்றத்தாலும் நிகழ்கிறது.

போதிய விழிப்புணர்வு இல்லாத அரசுகள்

தெற்காசிய நாடுகளில் நிகழ்ந்த பருவநிலை மாற்றத்தால் பலர் பலியான சூழலிலும் அதனை எதிர்கொள்வதற்கு அரசுகள் தயாராகவும், போதிய விழிப்புணர்வுமின்றி இருப்பதாகவும் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் உருவான சுனாமியால் ஏற்பட்ட பேரலையில் சிக்கி 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இருபது ஆண்டுகளைக் கடந்தும் இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று மட்டக்களப்பைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆய்வாளரான சரளா இம்மானுவேல் கூறுகிறார்.

இதுகுறித்து அவர் பேசும் போது, “இதுபோன்ற பேரிடர் ஏற்படும்போது, ​​ஏழைகளும் விளிம்புநிலை மக்களும்தான் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

குறிப்பாக நிலச்சரிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேயிலைத் தோட்டத் தொழிலே செய்து வருகின்றனர்” என்கிறார் சரளா.

இந்தோனேசியாவின் கடுமையான மழை வெள்ளத்துக்கு அதிகளவிலான காடுகள் அழிக்கப்பட்டதும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

2000 ஆம் ஆண்டு முதல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசிய மாகாணங்களான ஆச்சே, வடக்கு சுமத்ரா மற்றும் மேற்கு சுமத்ரா ஆகிய பகுதிகளில் 19,600 சதுர கி.மீ. அளவுக்கு காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

குளோபல் ஃபாரஸ்ட் வாட்ச் (Global Forest Watch) நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தின் பரப்பளவிற்கு இணையாக இந்தோனேசியாவில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

இவ்வளவு மரங்கள் வெட்டப்பட்டதாகக் கூறப்படும் கருத்துகளை அதிகாரிகள் மறுத்தாலும், பழைய மரங்களை வீட்டின் உரிமையாளர்கள் வெட்டியிருக்கலாம் என்றும் மழுப்பலாகப் பதில் கூறுகின்றனர்.

இழக்கப்படும் பல கோடிகள்

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகளால் மட்டும், ஆண்டுதோறும் பல கோடிக் கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்படுகின்றது.

இந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் புயல்கள் காரணமாக வியத்நாமில் 3 பில்லியன் டாலர்கள் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் நேரிட்ட பேரழிவுகளுக்கு சரியான தரவுகள் இல்லாத நிலையில், சராசரியாக 1.37 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று நாட்டின் நிதித்துறை கூறுகிறது.

தாய்லாந்தின் பாதிப்புகளுக்கான முழுமையான செலவுகள் குறித்த தரவுகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை என்றாலும்கூட ஆகஸ்ட் மாதத்திலிருந்து சுமார் 47 மில்லியன் டாலர்கள் அளவுக்கு இழப்புகளை மதிப்பிட்டுள்ளது தாய்லாந்து அரசின் வேளாண்மைத் துறை அமைச்சகம்.

அதேவேளையில், தெற்கு தாய்லாந்தில் நவம்பர் மாதம் நேர்ந்த வெள்ளத்தால் மட்டும் சுமார் 781 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டதாகவும், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1 சதவிகிதம் இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் பிரேசிலில் நடைபெற்ற காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில், தொடர்ந்து அதிகரித்து வரும் காலநிலை மாற்ற பேரழிவுகளால் சிக்கித் தவிக்கும் நாடுகளுக்கான நிதியுதவியை 1.3 டிரில்லியனாக மூன்று மடங்கு உயர்த்துவதாகவும் 2035 ஆம் ஆண்டுக்குள் கிடைக்கச் செய்வதாகவும் உறுதியளிக்கப்பட்டது.

வளர்ந்துவரும் நாடுகள் கேட்டதைவிட இது இன்னும் மிகக் குறைவு என்றாலும், அது நிறைவேறுமா? என்பது கேள்விக்குறியே!

Summary

Deadly Asian floods are no fluke. They’re a climate warning, scientists say...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com