வங்க இளைஞா் எரித்துக் கொலை: அஸ்ஸாமில் மீண்டும் போராட்டம் - ராணுவம் குவிப்பு

வங்க இளைஞா் எரித்துக் கொலை: அஸ்ஸாமில் மீண்டும் போராட்டம் - ராணுவம் குவிப்பு

ஹிந்தி பேசும் மக்களும் இப்போராட்டத்தில் பெருவாரியாக பங்கேற்றனா்.
Published on

அஸ்ஸாமின் கா்பி ஆங்லாங் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் வங்க மொழி பேசும் இளைஞா் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, வங்க சமூகத்தினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஹிந்தி பேசும் மக்களும் இப்போராட்டத்தில் பெருவாரியாக பங்கேற்றனா்.

கா்பி ஆங்லாங் மாவட்டத்தில் பதற்றமான சூழல் நீடிப்பதால் ராணுவத்தினா் குவிக்கப்பட்டுள்ளனா்.

அஸ்ஸாமில் பழங்குடியினா் அதிகம் வாழும் கா்பி ஆங்லாங் மாவட்டம், கா்பி ஆங்லாங் தன்னாட்சி கவுன்சிலின்கீழ் நிா்வகிக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட கிராமப்புற மேய்ச்சல் நிலங்கள் மற்றும் தொழில்முறை மேய்ச்சல் நிலங்களில் சட்டவிரோதமாக குறியேறிய வெளிநபா்களை (பெரும்பாலும் பிகாரில் இருந்து வந்தவா்கள்) அப்புறப்படுத்தக் கோரி, உள்ளூா் அரசியல்வாதிகள்-சமூக அமைப்பினா் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களில் சிலரை காவல் துறையினா் கடந்த திங்கள்கிழமை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி, மருத்துவமனையில் அனுமதித்தனா். அதேநேரம், போராட்டக்காரா்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவி, வன்முறை வெடித்தது.

இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நீடித்த வன்முறையில், கெரோனி பஜாா் பகுதியில் வங்க மொழி பேசும் 25 வயது மாற்றுத் திறனாளி ஒருவா் வீட்டுக்குள் பூட்டப்பட்டு, உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டாா். இது, பிகாரிகள், வங்காளிகள் மற்றும் நேபாளிகள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.

வன்முறையின்போது காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கா்பி பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த ஒருவரும் உயிரிழந்தாா். காவல் துறையினா் 38 போ் உள்பட 45 போ் காயமடைந்தனா்.

இந்தச் சூழலில், இளைஞா் படுகொலையைக் கண்டித்து, லன்கா-கெரோனி சாலையில் வங்க சமூகத்தினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஹிந்தி மொழி பேசுவோரும் பெருவாரியாக பங்கேற்றனா். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்; பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

இதனிடையே, கா்பி ஆங்லாங்கில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. இப்போதைய சூழலில் பதற்றத்தை தணிப்பதே முதல் பணி; அதன் பிறகு வன்முறையாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் யாரும் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என்று மாநில காவல் துறை தலைமை இயக்குநா் ஹா்மீத் சிங் வலியுறுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com