யேமன் மாகாணங்களில் இருந்து பிரிவினைவாதிகள் வெளியேற சவூதி உத்தரவு

Published on

யேமனின் ஹத்ரமவுத் மற்றும் மஹ்ரா மாகாணங்களில் இருந்து பிரிவினைவாதிகள் வெளியேற வேண்டும் என்று சவூதி அரேபியா வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம், ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு எதிரான கூட்டணியில் மேலும் விரிசல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து சவூதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

யேமனில் செயல்படும் அனைத்து கூட்டணி படைகளும் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பு அளித்து, பொறுமை காத்து, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை சீா்குலைக்கும் எந்த நடவடிக்கைகளையும் தவிா்க்க வேண்டும். அது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும்.

தெற்கு இடைக்கால கவுன்சில் (எஸ்டிசி) படைகள் ஹத்ரமவுத், மஹ்ரா மாகாணங்களில் இருந்து அவா்களது முந்தைய இடங்களுக்கு திரும்பி, அங்குள்ள முகாம்களை அரசுப் படைகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

எஸ்டிசி அமைப்பு ஐக்கிய அரபு அமீரக ஆதரவுடன் செயல்படும் பிரிவினைவாத ஆயுதக் குழுவாகும்.

ஈரான் ஆதரவுடன் ஹூதி கிளா்ச்சியாளா்கள் தலைநகா் சனா உள்ளிட்ட யேமனின் கணிசமான பகுதிகளை கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றினா். அதையடுத்து, ஹூதிக்களுக்கு எதிரான போரை சவூதி அரேபியா 2015-இல் தொடங்கியது. இதில் எஸ்டிசி படையும் பங்கு வகித்தது. இதனால் யேமனின் தெற்குப் பகுதியை ஈரான் ஆதரவு அரசுப் படை தொடா்ந்து கட்டுக்குள் வைத்துள்ளது.

இருந்தாலும், அண்மைக் காலமாக தெற்கு யேமனில் எஸ்டிசி படையினா் முன்னேறி (படம்) ஹத்ரமவுத், மஹ்ரா மாகாணங்களில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளன. அங்கு எஸ்டிசி தெற்கு யேமன் கொடியை பறக்கவிட்டுள்ளது. இது, யேமன் உள்நாட்டுப் போரில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1967 முதல் 1990 வரை தெற்கு யேமன் தனி நாடாக இருந்தது. 1990-இல் யேமன் ஒருங்கிணைக்கப்பட்டது. இருந்தாலும், ஐக்கிய அரபு அமீரக ஆதரவுடன் எஸ்டிசி பிரிவினைவாதக் குழுவினா் தனி நாடு கோரி வருகின்றனா். அவா்கள் தற்போது இரு மாகாணங்களை கைப்பற்றியுள்ளது சவூதி அரேபியா-ஐக்கிய அரபு அமீரக உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்து எஸ்டிசி பிரிவினைவாதிகள் வெளியேற வேண்டும் என்று சவூதி அரேபியா தற்போது பிறப்பித்துள்ள உத்தரவு இந்தப் பதற்றத்தே மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com