காஸாவின் எதிர்காலம் இது! நெதன்யாகுவுடன் மது அருந்தும் டிரம்ப்!

பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மது அருந்துவதைப் போன்ற செய்யறிவு விடியோ வைரல்.
அமெரிக்க கட்டுப்பாட்டில் காஸா எப்படி இருக்கும், டிரம்ப் வெளியிட்ட விடியோ
அமெரிக்க கட்டுப்பாட்டில் காஸா எப்படி இருக்கும், டிரம்ப் வெளியிட்ட விடியோபடம் | ட்ரூத் (TRUTH)
Published on
Updated on
2 min read

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மது அருந்துவதைப் போன்ற செய்யறிவு (ஏஐ) தொழிநுட்ப விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

காஸாவை அமெரிக்கா கைப்பற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் அமெரிக்க கட்டுப்பாட்டில் காஸா எப்படி இருக்கும் என்பதைப் போன்ற சித்திரிக்கப்பட்ட செய்யறிவு விடியோவை அதிபர் டிரம்ப் பகிர்ந்துள்ளார்.

அந்த விடியோவில், காஸா நகரத்தின் மையத்தில் டொனால்ட் டிரம்ப்புக்கு தங்க நிறத்தில் சிலை, அமைதியான கடற்கரையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் டிரம்ப் மது அருந்துவது, எலான் மஸ்க் நடைப்பயணம் செல்வது, குழந்தைகளுக்கு பணத்தை வாரி இறைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதோடு மட்டுமின்றி கேளிக்கை விடுதியில் பெண்களுடன் டிரம்ப் நடனமாடுவது, கடற்கரையில் பெண்களின் நடன நிகழ்ச்சி, குழந்தைகள் சுதந்திரமாக டிரம்ப் முகம் பொறித்த பலூன்களை வைத்து விளையாடுவது, கடைகள் முழுக்க டிரம்ப்பின் சிறிய உருவச் சிலைகள் விற்பனை, கடற்கரையில் உணவு உட்கொள்வது, சாலைகளில் சொகுசு கார்கள், நட்சத்திர விடுதிகள் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

பதுங்கு குழிகளும், துப்பாக்கிகளும், வெடிக்காத குண்டுகளும் நிறைந்த பூமியை முற்றிலுமாக மாற்றி நகரத்தை மேம்படுத்துவதைப் போன்று அந்த விடியோவில் காட்சிப்படுத்தப்படுகிறது. இந்த விடியோவின் பின்னணியில் டிரம்ப் காஸா இது என்ற பாடலும் ஒலிக்கிறது. இந்த விடியோவுக்கு பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

https://truthsocial.com/@realDonaldTrump/posts/114068387897265338

அமெரிக்க வசமாகுமா காஸா?

இஸ்ரேல் - காஸாவின் ஹமாஸ் படையினரிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. வரும் சனிக்கிழமை (மார்ச் 1) உடன் ஒப்பந்தம் முடிவடைகிறது.

போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதற்காக இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இஸ்ரேல் சிறைபிடித்துவைத்துள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது டிரம்ப் பேசியது சர்ச்சையானது. அதாவது காஸாவை கையகப்படுத்தவுள்ளதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். அவரின் இந்த அறிவிப்புக்கு சர்வதேச அளவில் கலவையான விமர்சனங்கல் எழுந்தன.

காஸாவிலிருந்து சுமாா் 20 லட்சம் பாலஸ்தீனா்களை எகிப்து, கத்தாா், ஜோா்டான் போன்ற இஸ்லாமிய நாடுகளுக்கு அனுப்பி, அந்தப் பகுதியை ‘சுத்தப்படுத்த’ வேண்டும் என்று ஏற்கெனவே கூறியிருந்த டிரம்ப், காஸாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப் போவதாக அறிவித்தது பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது.

காஸாவை கைப்பற்றுவது குறித்து டிரம்ப் பேசியதாவது, ''காஸா முனையை அமெரிக்கா கையகப்படுத்தும். போா்க்களத்திலிருந்து வெடிக்காத ஆபத்தான குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களையும், இடிந்த கட்டடங்களையும் அகற்றி, அப்பகுதியின் மறுகட்டமைப்புக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம். அப்பகுதி மக்கள் அனைவருக்கும் குடியிருப்பு மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்கும் ஒரு பொருளாதார வளா்ச்சி உருவாக்கப்படும்'' என டிரம்ப் அறிவித்திருந்தார்.

டிரம்ப்பின் இந்த அறிவிப்பை பெஞ்சமின் நெதன்யாகும் வரவேற்றார். அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் காஸா கொண்டுவரப்பட்டால், இஸ்ரேலுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இருக்காது; அதுவே தங்கள் நோக்கம் எனவும் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | போப் மறைவுக்குப்பின் உலகத்துக்குப் பேரழிவு? 450 ஆண்டுகளுக்கு முந்தைய கணிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com