

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பை ஏற்று காஸா அமைதி வாரியத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இணைந்துள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலில் முழுவதுமாகச் சேதமடைந்துள்ள காஸா நகரத்தின் மறுசீரமைப்பிற்கும், அங்குள்ள பாலஸ்தீனர்களின் மறுவாழ்விற்கும் தேவையான நடவடிக்கைகள் அமெரிக்க அரசின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, காஸா நகரத்தை நிர்வாகம் செய்வதற்கு உலக நாடுகளின் தலைவர்கள் இடம்பெறும் அமைதி வாரியத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் அதிபர் டிரம்ப் ஈடுபட்டு வருகின்றார். அந்த வாரியத்தில் இணையுமாறு பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில், அதிபர் டிரம்ப்பின் அழைப்பை ஏற்று காஸா அமைதி வாரியத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுப்பினராக இணைந்துள்ளார் என இஸ்ரேல் அரசு இன்று (ஜன. 21) தெரிவித்துள்ளது.
காஸாவின் அமைதிக்காக உருவாக்கப்படும் இந்த வாரியத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இணைக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கெனவே, ஐக்கிய அரபு அமீரகம், மொராக்கோ, வியத்நாம், கஜகஸ்தான், ஹங்கேரி, ஆர்ஜென்டீனா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் அதிபர் டிரம்ப்பின் அழைப்பை ஏற்று காஸா அமைதி வாரியத்தில் இணைந்துள்ளன.
மேலும், இந்தியா, பராகுவே, கனடா, எகிப்து, துருக்கி, ரஷியா, ஸ்லோவேனியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கிழக்கு ஜெரூசலேமில் அமைந்திருந்த ஐ.நா. பாலஸ்தீன அகதிகள் நல அமைப்பின்(யு.என்.ஆா்.டபிள்யூ.ஏ.) தலைமையகத்தை, இஸ்ரேல் அரசு செவ்வாய்க்கிழமை புல்டோசா்கள் மூலம் இடித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.