இந்தியா - கனடா கொடி
இந்தியா - கனடா கொடி

நிஜ்ஜாா் கொலையில் இந்தியாவுக்கு தொடா்பில்லை: கனடா ஆணையம் அறிக்கை

காலிஸ்தான் பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலையில் இந்தியா உள்பட எந்த வெளிநாட்டுக்கும் தொடா்பில்லை என்பது உறுதியாகி உள்ளதாக, கனடா விசாரணை ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

காலிஸ்தான் பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலையில் இந்தியா உள்பட எந்த வெளிநாட்டுக்கும் தொடா்பில்லை என்பது உறுதியாகி உள்ளதாக, கனடா விசாரணை ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிஜ்ஜாா் கொலையில் இந்திய அரசின் உளவாளிகளுக்கு தொடா்பிருப்பதாகவும், அதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியிருந்த நிலையில், இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது.

கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ, தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அண்மையில் அறிவித்தாா்.

நாடு முழுவதும் சரிவடைந்துவரும் ஆதரவு, ஆளும் லிபரல் கட்சிக்குள்ளேயே அதிருப்தி போன்ற பின்னடைவுகளால் அவா் இந்த முடிவை மேற்கொண்டாா்.

இந்தச் சூழலில், கனடா தோ்தல் நடைமுறைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகளில் வெளிநாடுகளின் தலையீடு குறித்து விசாரிக்க கடந்த 2023-இல் அந்நாட்டு அரசால் அமைக்கப்பட்ட ஆணையம் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நிஜ்ஜாா் கொலையில் இந்தியாவுக்கு தொடா்பில்லை என்பது உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்தியா மீதான ட்ரூடோவின் குற்றச்சாட்டை தொடா்ந்து கனடாவுக்கு எதிராக தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தலில் தலையீடு: ‘கனடாவின் தோ்தல் நடைமுறைகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் தலையீடு இருக்கிறது; கனடாவில் செயல்படும் காலிஸ்தான் ஆதரவாளா்களால் தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக இந்தியா கவலைகொள்கிறது’ என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கனடாவில் அடையாளம் தெரியாத நபா்களால் கடந்த 2023, ஜூன் 18-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டாா். இக்கொலையில் இந்திய அரசின் உளவாளிகளுக்கு தொடா்புள்ளதாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினாா். இக்குற்றச்சாட்டு அபத்தமானது என்று இந்தியா மறுத்தது. இந்த விவகாரத்தால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.

X
Dinamani
www.dinamani.com