8 மாத ஊதியத்துடன் ராஜிநாமா! 23 லட்சம் ஊழியர்களுக்கு அமெரிக்க அரசு மின்னஞ்சல்!

அமெரிக்க அரசு ஊழியர்கள் ராஜிநாமா செய்துகொள்ள சலுகை வழங்கிய டிரம்ப் அரசு....
டொனால்டு டிரம்ப்
டொனால்டு டிரம்ப்AP
Published on
Updated on
1 min read

அமெரிக்காவில் பணிபுரியும் 23 லட்சம் அரசு ஊழியர்களுக்கு, 8 மாத ஊதியத்துடன் ராஜிநாமா செய்துகொள்ள அதிபர் டொனால்டு டிரம்ப் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் ராஜிநாமா செய்வதற்கு ஒப்புதல் அளிக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே 8 மாத ஊதியம் வழங்கப்படும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக கடந்த 20 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்ட டிரம்ப், பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், அரசு ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க பணியாளர் மேலாண்மை ஆணையம் சுமார் 23 லட்சம் அரசு ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி உள்ளது.

அதில் தெரிவித்திருந்ததாவது:

“அரசு ஊழியர்களுக்கு அமெரிக்காவில் வரி செலுத்துவோர் ஊதியம் அளித்து வருகிறார்கள். அதிபர் டிரம்பின் அரசியல் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ராஜிநாமா செய்து கொண்டு வேறு பணியை சுதந்திரமாக தேர்ந்தெடுத்துக் கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அரசுப் பணியை தொடர விரும்பாதவர்கள் ’ராஜிநாமா செய்கிறேன்’ என்று இந்த மின்னஞ்சலில் பதிலளித்தால் போதுமானது. செப்டம்பர் 30ஆம் தேதி வரை அவர்களுக்கு முழு ஊதியமும் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கான அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.

பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் பதிலளிப்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.

நீங்கள் உங்கள் தற்போதைய பணியை தொடர விரும்பினால், புதிய அரசின் ஒரு பகுதியாக இணைந்து செயல்பட எதிர்நோக்குகிறோம். ஆனால், உங்களின் தற்போதைய பதவிக்கு முழு உத்தரவாதம் அளிக்க முடியாது. பதவி மாற்றப்பட்டாலும் கண்ணியத்துடன் நடத்துவோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்க ராணுவ வீரர்கள், தூதரகம், பாதுகாப்பு, தபால் சேவை ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் அரசின் இந்த வாய்ப்பை ஏற்று 5 முதல் 10 சதவிகித ஊழியர்கள் ராஜிநாமா செய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரி ஒருவர் ஆங்கில செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இதன்மூலம், அரசின் 10,000 கோடி டாலர் பணம் சேமிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.