
சீனாவின் யுன்னான் மாகாணத்திலுள்ள ஜாவோடொங் எனும் மலை நகரத்தில் பெய்து வரும் கனமழையால் 5 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜாவோடொங் நகரத்தில், கடந்த ஜூலை 8 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகின்றது. இதனால், அங்குள்ள ஏராளமான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
வெயிக்ஸின் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில், அங்கிருந்த 2 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு 5 பேர் மாயமாகியுள்ளனர். இதனால், அவர்களைத் தேடும் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அங்குள்ள ஏராளாமான இடங்களில் கனமழையால் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 7,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், சிச்சுவான் மாகாணத்தில் பெய்த கனமழையால், ஷிசூவாங் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 5 பேர் மாயமாகினர். செங்கோதொங் நகரத்தில் நிலச்சரிவால் 24 பேர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இத்துடன், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள நீர்நிலைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், வரக்கூடிய நாள்களில் கனமழை அதிகரிக்கும் என்பதால் அங்குள்ள ஆறுகளின் அருகில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவின் நீர்வளத் துறை அமைச்சகம், குவாங்தொங் மாகாணத்துக்கு 4-ஆம் நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
அம்மாகாணத்தில், இன்று (ஜூலை 9) முதல் ஜூலை 11 ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஜெஜியாங், ஃபுஜியான், சோங்கிங் மற்றும் சிச்சுவான் ஆகிய மாகாணங்களுக்கு வெள்ளத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அமைச்சகம் நான்காம் நிலை வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.