
பசிபிக் கடலின் மிக ஆழமான அபிஸ்ஸோபெலாஜிக் மண்டலத்தில், ரோபோ உதவியோடு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் பாறைகளுடன் ஒட்டியிருந்த 4 கருப்பு முட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த முட்டைகளை மேற்பரப்புக்குக் கொண்வந்து ஆராய்ச்சி செய்ததில், அவை தட்டையான புழுக்களுடையது என்றும், இது பெரும்பாலும் நீர்நிலைகளில் வாழ்வதாக இருக்கலாம் என்றும், அறிவியல் பூர்வமாக இதுவரை பார்த்திடாத உயிரினமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் கூறுகையில், இந்த முட்டையை ஆராய்வதற்கு முன்பு, இப்படியொரு உயிரினம் இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை, அது எப்படி இருக்கும் என்றுகூடத் தெரியாது என்கிறார்கள்.
பசிபிக் கடலின் மிக ஆழமான இடத்தில், இந்த தட்டைப் புழுக்கள் வாழ்ந்து வந்தாலும், மேல்பரப்பில் அல்லது தரைப்பரப்பில் வாழும் புழுக்களின் உடல் அமைப்பை ஒத்தே இவை இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பைக் கூட மனிதர்களால் ஆராய்ந்துவிட முடியும். ஆனால், உலகின் 70 சதவீதப் பரப்பைக் கொண்ட கடலின் ஆழம் மற்றும் அதன் தரைப் பகுதியை ஆராய்வது என்பது மிகவும் அரிது. அதுவும் மீன்களைப் போல செதில்கள் இல்லாத உயிரினங்களுக்கு அரிதிலும் அரிது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
கடலின் மேற்பரப்பிலிருந்து 6,200 மீட்டர் ஆழத்தில், ரோபோ இறக்கப்பட்டு, அங்கிருக்கும் பொருள்களை விடியோ எடுத்து, அதில், ஒரு பாறை மீதிருந்த ஜெட்-கருப்பு முட்டைகளை பத்திரமாக மேற்பரப்புக்குக் கொண்டு வந்து ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது.
இந்த அபிஸ்ஸோபெலாஜிக் மண்டலத்தைவிடவும் ஆழமான பகுதியாக இருப்பது ஹடோபெலாஜிக் மண்டலம். ஆனால், இப்பகுதி முழுவதும் ஆழமான பள்ளங்களைக் கொண்டிருக்கும். இங்கு வாழும் உயிரினங்கள் உள்ளிட்ட பல ஆய்வுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.