பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு ஏற்படலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
”இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தம் இப்போது வரை இறுதி செய்யப்படவில்லை. எனவே, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் 25 சதவீத வரி விதிக்கப்படும்” என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சில மணிநேரங்களிலேயே மற்றொரு அறிவிப்பையும் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
“பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானும் அமெரிக்காவும் இணைந்து மிகப்பெரிய எண்ணெய் சேமிப்புக் கிடங்கை பாகிஸ்தானில் மேம்படுத்தப் போகிறோம்.
இந்த கூட்டாண்மையை வழிநடத்தும் எண்ணெய் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாங்கள் இருக்கிறோம். யாருக்குத் தெரியும், ஒருநாள் இந்தியாவுக்குகூட அவர்கள் எண்ணெய் விற்பனை செய்வார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, வெள்ளை மாளிகையில் இந்தியாவுடனான ஒப்பந்தம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப்,
“நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அமெரிக்காவை அடிப்படையில் எதிர்க்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக இருக்கிறது. டாலர் மீதான தாக்குதலை நடத்த யாரையும் அனுமதிக்கப் போவதில்லை.
பிரதமர் மோடி என்னுடைய நண்பர், ஆனால் வணிக ரீதியில் அவர்கள் அமெரிக்காவுடன் அதிகளவில் வியாபாரம் செய்வதில்லை. அவர்கள் எங்களிடம் நிறைய விற்கிறார்கள், ஆனால், நாங்கள் வாங்க விரும்பவில்லை. ஏனெனில் அதிக வரி விதிக்கப்படுகிறது. உலகில் மிக உயர்ந்த வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது.
தற்போது, வரியைக் கணிசமாகக் குறைக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. என்ன நடக்கப் போகிறது என்பதை பார்ப்போம். ஒப்பந்தம் நிறைவு பெறுமா அல்லது அதிக வரி விதிக்கப்படுமா என்பது இந்த வார இறுதியில் தெரியவரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.