புதிய கட்சி தொடங்கும் எலான் மஸ்க்? 81% பேர் ஆதரவு!

‘டெஸ்லா' நிறுவனர் எலான் மஸ்க்கின் எக்ஸ் தள வாக்கெடுப்பு சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.
எலான் மஸ்க்
எலான் மஸ்க்
Published on
Updated on
2 min read

அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க் புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக, தனது எக்ஸ் தளத்தில் வாக்கெடுப்பு நடத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகிய இருவருக்கும் இடையிலான கருத்து மோதல் பொதுவெளியில் வெடித்து சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

2024-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டார் டெஸ்லா நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க்.

அதன்பின்னர், ஆட்சியில் அமர்ந்த அதிபர் டிரம்ப், அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறையை உருவாக்கி அதற்கு எலான் மஸ்க்கை தலைவராக்கினார்.

இவை அனைத்தும், இருவருக்கும் இடையிலான புதியதொரு நட்பை, உலகளவில் எடுத்துச் சென்ற நிலையில் அதிபர் டிரம்ப்பின் சில புதிய முடிவுகள் சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வந்தன.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதாவுக்கு எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்ததோடு, டிரம்ப்பின் நிர்வாகத்திலிருந்து அவர் விலகினார்.

இந்த மாற்றமானது, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இருவரும் தற்போது பொதுவெளியிலேயே கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பாலியல் குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் மர்மமான முறையில் மரணமடைந்த ஜெஃப்ரி எப்ஸ்டைனின் ஆவணங்களில் அதிபர் டிரம்ப்பின் பெயர் இருப்பதாகத் தனது எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் பதிவிட்டது புதிய பூகம்பத்தையே உருவாக்கியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தது. இத்துடன், அதிபர் டிரம்ப் கொண்டு வந்துள்ள புதிய வரி மசோதாவினால், நிதியாண்டின் இரண்டாவது பாதியில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகள் உருவாகும் எனவும் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.

dinamani

இதனைத் தொடர்ந்து, தனது எக்ஸ் தளத்தில், அமெரிக்காவின் 80 சதவிகித நடுத்தர மக்களின் பிரதிநிதியாக ஒரு புதிய கட்சியைத் தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டதா? என்று எலான் மஸ்க் வாக்கெடுப்பு நடத்தியுள்ளார்.

அந்த வாக்கெடுப்பில் சுமார் 80.6 சதவிகிதம் பேர் ‘ஆம்’ என வாக்களித்துள்ளனர். மேலும், 19 சதவிகிதம் ‘இல்லை’ என்றும் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அவ்வப்போது, தனது புதுப்புது செயல்களினால் சர்வதேச அளவில் ரசிகர்களையும், விமர்சகர்களையும் பெற்றுள்ள எலான் மஸ்க், டிரம்ப் நிர்வாகத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்பட்டார். ஆனால், அவர் தனது பதவி விலகியபோது மஸ்க்கின் ஆதரவாளர்கள் டிரம்ப்புக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கத் துவங்கினர்.

தற்போது, டிரம்ப்பை பதவியிலிருந்து நீக்கி துணை அதிபர் ஜேடி வேன்ஸ்-ஐ அதிபராக்க வேண்டும் என்ற கருத்துக்கு எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், தற்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெருவாரியான ஆதரவு அவருக்கு கிடைத்துள்ள நிலையில் விரைவில் எலான் மஸ்க் புதிய கட்சி ஒன்றை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: டிரம்பை நீக்கிவிட்டு, அதிபர் பதவியில் ஜே.டி. வான்ஸ்: எலான் மஸ்க் வலியுறுத்தல்

மேலும் படிக்க...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com