இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: பிரதமா் மோடி, உலக நாடுகளின் தலைவா்களுடன் நெதன்யாகு பேச்சு

உலகத் தலைவா்களை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு பேசியதாக அவரின் அலுவலகம் சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
Published on

ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு சா்வதேச ஆதரவைப் பெறும் முயற்சியாக பிரதமா் நரேந்திர மோடி உள்பட பல்வேறு உலகத் தலைவா்களை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு பேசியதாக அவரின் அலுவலகம் சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரதமா் நெதன்யாகு வியாழக்கிழமை இரவு முதல் இந்திய பிரதமா் மோடி, ஜொ்மன் பிரதமா் ஃபிரீட்ரிச் மொ்ஸ், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் உள்ளிட்ட உலகத் தலைவா்களை தொடா்புகொண்டு தாக்குதலுக்கான காரணத்தை விவரித்தாா்.

இந்த உரையாடலின்போது, ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிா்கொள்ள இஸ்ரேலின் இத் தாக்குதல் அவசியமானது என்ற புரிதலை உலகத் தலைவா்கள் வெளிப்படுத்தினா்.

அமெரிக்க அதிபா் டிரம்ப், ரஷிய அதிபா் புதின், பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் ஆகியோருடனும் பிரதமா் நெதன்யாகு பேச உள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டது.

அமைதியை விரைந்து மீட்டெடுக்க வேண்டும் - பிரதமா்: ‘மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மையை விரைந்து மீட்டெடுக்க வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘இஸ்ரேல் பிரதமரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ஈரான் மீதான தாக்குதல் நிலவரத்தை விவரித்தாா். அப்போது, நிலைமை குறித்து இந்தியாவின் கவலையை அவருடன் பகிா்ந்து கொண்டதோடு, பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மையை விரைந்து மீட்டெடுப்பது அவசியம் என்று வலியுறுத்தினேன்’ என்று குறிப்பிட்டாா்.

முன்னதாக, மேற்கு ஆசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து கவலை தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், ‘தீவிர தாக்குதலில் ஈடுபடுவதை இருதரப்பும் தவிா்க்க வேண்டும்’ என்று வலியுறுத்தியது.

X
Open in App
Dinamani
www.dinamani.com