
ஈரான் தலைநகர் டெஹ்ரான் விமான நிலையத்தில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அமெரிக்க தயாரிப்பு எஃப்-14 ரகத்தைச் சேர்ந்த 2 விமானங்கள் தகர்க்கப்பட்டன.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஒரு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு எஃப்-14 போர் விமானங்கள் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக விடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த ஜெட் விமானங்கள் இஸ்ரேலிய விமானங்களை இடைமறிக்கும் தன்மை கொண்டவை என்றும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்திருக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான தாக்குதலைத் தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் இரு நாடுகளுக்கிடையே சண்டை நடைபெற்றுவருகிறது. டெஹ்ரான் மற்றும் ஈரான் முழுவதும் பல இடங்களில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை நடத்தியது.
இந்தத் தாக்குதல்களில் மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். மேலும் முக்கியமான உள்கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதில் இரு நாடுகளுக்கும் இடையே போர்ப் பதற்றத்தை கடுமையாக அதிகரித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு மத்தியில் அமெரிக்க தயாரிப்பு விமானமான எஃப்-14 ரக விமானங்களில் இரண்டும் வீழ்த்தப்பட்டிருக்கின்றன. இந்த விமானங்கள் அந்நிய நாடுகள் நடத்தும் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் வல்லமை படைத்தவை. ஒரே நேரத்தில் 24 ஏவுகணைகளையும், 100 கி.மீக்கு அப்பால் இருக்கும் இலக்கையும் தாக்கும் வலிமையும் இந்த எஃப்-14 ரக விமானத்துக்கு இருக்கிறது.
இஸ்ரேல் ராணுவம் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் விடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
அந்தப் பதிவில், “மேற்கு ஈரானின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. அவற்றுள் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சேமிப்பு மையங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் ஆகியவையும் வீழ்த்தப்பட்டுள்ளன” எனப் பதிவிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.