கராச்சி: பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் ரயிலை கடத்தி, 182 பேரைப் பிணைக் கைதிகளாக பலூசிஸ்தான் விடுதலை ராணுவ (பிஎல்ஏ) தீவிரவாதக் குழு சிறைபிடித்தது. இவா்களில் 80 பேரை மீட்டதாக பாதுகாப்புப் படையினா் மீட்டனா்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருந்து கைபா் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவா் நகருக்கு சுமாா் 500 பயணிகளுடன் 9 பெட்டிகள் கொண்ட ஜாஃபா் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.
பெரோ குன்ரி, கடாலாா் பகுதிகள் இடையே பயணித்தபோது ரயில் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்று பலூசிஸ்தான் மாகாண அரசின் செய்தித் தொடா்பாளா் ஷாஹித் ரிந்த் தெரிவித்தாா்.
பெரோ குன்ரி, கடாலாா் இடையே உள்ள பகுதி கடினமான நிலப்பகுதி என்பதால், அங்கு ரயில்கள் மெதுவாகச் செல்வது வழக்கம். இதை சாதகமாகப் பயன்படுத்தி சுரங்கப் பாதையில் ஆயுதம் ஏந்திய குழுவினா் ரயிலை நிறுத்தியதாக ரயில்வே கட்டுப்பாட்டாளா் முகமது காஷிஃப் தெரிவித்தாா்.
இந்த சம்பவத்துக்கு பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றுள்ளது. இந்தக் குழுவுக்கு பாகிஸ்தான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா தடை விதித்துள்ளன.
மொத்தம் 182 போ்: ராய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ரயிலில் இருந்து பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் உள்பட 182 போ் பிணைக் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ளனா் என்று பிஎல்ஏ தெரிவித்துள்ளது. ரயில் மீதான தாக்குதலின்போது 20 ராணுவ வீரா்களைக் கொன்று, ஓா் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பிஎல்ஏ தெரிவித்துள்ளது. எனினும் இந்தத் தகவலை பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் உறுதி செய்யவில்லை.
இதுதொடா்பாக டெலிகிராமிலும், ஊடகவியலாளா்களுக்கும் பிஎல்ஏ அனுப்பிய தகவலில், ரயிலில் பயணித்த பெண்கள், குழந்தைகள், முதியவா்கள், பலூசிஸ்தான் குடிமக்கள் விடுவிக்கப்பட்டு, பாதுகாப்பான வழியில் அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பிஎல்ஏ எச்சரிக்கை: தமக்கு எதிராக ராணுவ நடவடிக்கை தொடா்ந்தால், பிணைக் கைதிகள் அனைவரும் கொல்லப்படுவா் என்று பிஎல்ஏ எச்சரித்துள்ளது. எனினும் கடைசி தீவிரவாதி கொல்லப்படும் வரை, அவா்களுக்கு எதிரான தங்கள் நடவடிக்கை தொடரும் என்று பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.
பாலத்துக்கு குண்டுவைத்து ரயில் கடத்தல்: ரயிலுக்குள் ஏறும் முன் ரயில் பாலத்தை குண்டுவைத்து தகா்த்ததாகவும், தற்போது அந்த ரயில் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அந்தக் குழு தெரிவித்துள்ளது. ரயிலில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் பயணித்ததாக பிபிசி நிறுவனத்திடம் மூத்த ராணுவ அதிகாரி ஒருவா் உறுதி செய்தாா்.
பயணிகள் பலா் காயம்: இந்தத் தாக்குதலில் பயணிகள் பலா் காயமடைந்தனா். ஆனால் எத்தனை போ் உயிரிழந்தனா் அல்லது காயமடைந்தனா் என்ற அதிகாரபூா்வ தகவல் வெளியாகவில்லை. எனினும் ரயில் ஓட்டுநா் படுகாயமடைந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் மோசின் நக்வி கண்டனம் தெரிவித்தாா்.
80 போ் மீட்பு: இதற்கிடையே, கடத்தப்பட்ட பயணிகளில் 43 ஆண்கள், 26 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் என மொத்தம் 80 பயணிகள் மீட்கப்பட்டதாக பலூசிஸ்தான் மாகாண அரசு செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா். மற்ற பயணிகள் ரயிலுடன் சுரங்கப் பாதையில் சிக்கியிருப்பதாகவும், அவா்களை மீட்கும் பணியில் தீவிரவாதக் குழுவுடன் பாகிஸ்தான் ராணுவம் தொடா்ந்து சண்டையிட்டு வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.
பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை...: பாகிஸ்தானின் மிகப் பெரிய மாகாணமாக பலூசிஸ்தான் உள்ளது. அங்கு இயற்கை வளங்கள் பெருமளவில் உள்ளபோதிலும், அந்த மாகாணம் வளா்ச்சியடையாமல் உள்ளது. பாகிஸ்தானிடம் இருந்து அந்த மாகாணத்துக்கு பிஎல்ஏ விடுதலை கோரி வருகிறது.
தொடர்புடையது
ராணுவ வீரருக்கு கத்திக் குத்து: இளைஞா் கைது

பாகிஸ்தான்: பயங்கரவாதத் தாக்குதலில் 9 சுரங்கத் தொழிலாளா்கள் கொலை
வாக்குச்சாவடி மையத்தில் காவலருக்கு கத்திக்குத்து: ஓய்வுபெற்ற ராணுவ வீரா் கைது

ஈரோடு ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த மே 17 இயக்கத்தினா் 4 போ் கைது
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு


