ஐரோப்பிய யூனியன் மீது மேலும் வரி விதிப்பு: டிரம்ப் சூளுரை
தங்கள் உறுப்பு நாடுகளின் இரும்பு, அலுமினியத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரி விதிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து அமெரிக்க பொருள்களுக்கான இறக்குமதி வரியை ஐரோப்பிய யூனியன் அதிகரித்தால் அதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் சூளுரைத்துள்ளாா்.
இது குறித்து செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘அமெரிக்க பொருள்களுக்கு ஐரோப்பிய யூனியன் கூடுதல் வரி விதித்தால் அதற்குப் பதிலடியாக, அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீதும் அதே அளவுக்கு வரி அதிகரிக்கப்படும்.
இது மட்டுமின்றி, உலகின் அனைத்து நாடுகளும் அமெரிக்காவின் எந்தெந்த பொருள்களுக்கு என்னென்ன விகிதங்களில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதங்களில் அந்த நாடுகளின் பொருள்களுக்கும் வரி விதிப்பதற்கான திட்டம் அடுத்த மாதம் அமலுக்குவருவதில் மாற்றமில்லை’ என்றாா்.
உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு அமெரிக்க அதிபவிதித்த 25 சதவீதம் கூடுதல் வரி புதன்கிழமை அமலுக்குவந்தது.
இந்த வரி விதிப்பால், அமெரிக்க இரும்பு இறக்குமதியில் 79 சதவீதம் பங்கு வகிக்கும் கனடாவும் அமெரிக்காவுக்கு பெரும்பான்மையாக அலுமினியம் ஏற்றுமதி செய்யும் மெக்ஸிகோவும் கடுமையாக பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளையும் இது பாதிக்கும் என்பதால், இது தொடா்பாக அமெரிக்கா மீதான பதிலடி நடவடிக்கை விரைவில் அறிக்கப்படும் என்று ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.