
சிரியாவின் இடைக்கால அதிபர் முதல்முறையாக ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிரியா நாட்டை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுவந்த அஸாத் குடும்பத்தின் ஆட்சி உள்நாட்டுப் போரின் மூலம் கவிழ்க்கப்பட்டு, கிளர்ச்சிப்படைகளின் தலைமையிலான ஆட்சி நிறுவப்பட்டது. அதன் பின்னர், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் எனும் கிளர்ச்சிப்படையின் தலைவரான அஹ்மத் அல்-ஷரா சிரியாவின் இடைக்கால அதிபராக பதவியேற்றார்.
இந்தப் புதிய அரசை பல்வேறு நாடுகள் தொடர்ந்து அங்கீகரித்து வரும் நிலையில் அதிபர் அஹ்மத் அல்-ஷரா முதல்முறையாக ஐரோப்பிய நாடொன்றுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மாக்ரோனின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், இன்று (மே 7) தலைநகர் பாரீஸ்-க்கு வந்தடைந்தார். மேலும், இன்று மாலை அவர், அதிபர் இம்மானுவேல் மாக்ரோனைச் சந்தித்து பேசவுள்ளதாக சிரியா அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பில் போருக்குப் பிந்தைய மறுகட்டமைப்புகள், பொருளாதார ஒத்துழைப்பு, வான்வழிப் போக்குவரத்து, மின்சாரம் ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டின் அதிபர் மாளிகை கூறுகையில், சுதந்திரமான, நிலையான மற்றும் இறையான்மை உடைய சிரியாவுக்கு அந்நாடு ஆதரவளிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, அதிபர் பஷார் அல்-அஸாத் ஆட்சியில் சிரியாவின் எண்ணெய், எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளில் விதிக்கப்பட்டிருந்த தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கி வரும் சூழலில் சிரியாவின் இடைக்கால அரசு மேற்கத்திய நாடுகளுடனான தனது உறவுகளை வலுப்படுத்த முயற்சித்து வருகின்றது.
மேலும், கடந்த வாரம் சிரியாவின் இடைக்கால அரசின் அதாரவுப்படைகள் மற்றும் ட்ருஸ் எனும் சிறுபான்மைப் பிரிவினருக்கும் இடையிலான மோதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இத்தகைய சூழலில் இந்தச் சந்திப்பானது மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தானில் எக்ஸ் தளத்தின் மீதான தடை நீக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.