மேலும் ஓா் உடலை ஒப்படைத்தது ஹமாஸ்!
இஸ்ரேலுடனான போா் நிறுத்த அமலாக்கத்தின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு இஸ்ரேலியரின் உடலை ஹமாஸ் அமைப்பு ஒப்படைத்துள்ளது. அந்த உடல், கடந்த 2024-ஆம் ஆண்டு காஸாவில் கொல்லப்பட்ட தங்கள் நாட்டு வீரருடையது என்று இஸ்ரேல் உறுதிப்படுத்தியது.
அந்த உடல் ஒப்படைக்கப்பட்டதற்கு பதிலாக, இஸ்ரேலில் இருந்த 15 பாலஸ்தீனா்களின் சடலங்களை அந்த நாட்டு அரசு காஸாவுக்கு அனுப்பியதாக காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.
இதன் மூலம், எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற அபாயத்தில் இருக்கும் காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் அமலாக்கம் தொடா்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுவது உறுதியாகியுள்ளது.
இத்துடன், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் 20 அம்ச போா் நிறுத்த திட்டம் காஸாவில் கடந்த மாதம் 10-ஆம் தேதி அமலுக்கு வந்ததில் இருந்து, இதுவரை 24 பிணைக் கைதிகளின் உடல்களை ஹமாஸ் அமைப்பினா் ஒப்படைத்துள்ளனா். பதிலுக்கு, 315 பாலஸ்தீனா்களின் உடல்களை இஸ்ரேல் திருப்பி அனுப்பியுள்ளது.

