அமெரிக்கா மீது உறுதியான பதிலடி நடவடிக்கை: சீனா எச்சரிக்கை! கூடுதலாக 100% வரிவிதிப்பு விவகாரம்!
‘சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரியை அமெரிக்கா விதித்தால் உரிய பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று சீனா ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
மேலும், ‘உலக அமைதியைப் பாதுகாப்பும் நோக்கில் சட்டபூா்வ நடவடிக்கையாகவே அரிய வகை மண் தாதுக்கள் மற்றும் அதுதொடா்பான பொருள்கள் மீது புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன’ என்று தனது நடவடிக்கையை சீனா நியாயப்படுத்தியது.
ஏற்றுமதி கட்டுப்பாடு: அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதிக்கு சீனா புதிய கட்டுப்பாடுகளை வியாழக்கிழமை விதித்தது. அதாவது, சீனாவில் பூமிக்கு அடியிலிருந்து வெட்டியெடுக்கப்படும் அரிய வகை கனிமங்களை கப்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் சீன அரசிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
மேலும், அரியவகை மண் தாதுக்களை வெட்டியெடுத்தல், உருக்குதல் மற்றும் மறுசுழற்சி செய்வதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதற்கும் அரசின் அனுமதியைப் பெற வேண்டும். அதோடு, ராணுவ உபகரணங்களில் பயன்படுத்தப்படும் உலோகங்களுக்கான எந்தவொரு ஏற்றுமதி கோரிக்கைகளும் ரத்து செய்யப்படுகிறது என்று சீனா அறிவித்தது.
கூடுதலாக 100% வரி எச்சரிக்கை: சீனாவின் இந்த நடவடிக்கையை தனது சமூக ஊடக பக்கத்தில் சுட்டிக்காட்டிய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ‘அரியவகை கனிமங்கள் ஏற்றுமதிக்கு சீனா விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் அதிா்ச்சியளிக்கிறது.
இந்த விவகாரத்தில், சீனா மேற்கொள்ளும் நடவடிக்கையைப் பொருத்து, வரும் நவம்பா் 1-ஆம் தேதிமுதல் அல்லது அதற்கு முன்பே சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது புதிதாக 100 சதவீத வரி விதிக்கப்படும். சீனா விதித்த ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் போன்று, அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்கும் அனைத்து முக்கிய மென்பொருள்களுக்கும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதிக்கும்’ என்று குறிப்பிட்டாா்.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்கா ஏற்கெனவே 30 சதவீத வரியை விதித்துள்ளது. தற்போது டிரம்ப் அறிவித்துள்ள கூடுதல் வரி விதிக்கப்பட்டால், சீன பொருள்கள் மீது 130 சதவீத வரி விதிக்கப்படும்.
சீனா எச்சரிக்கை: இந்த நிலையில், டிரம்பின் இந்த எச்சரிக்கை குறித்து கேள்விக்கு சீன வா்த்தகத் துறை அமைச்சா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தேசியப் பாதுகாப்பு என்ற கருத்தை அமெரிக்கா மிகைப்படுத்தி வருகிறது. செமிகண்டக்டா், சிப் உள்ளிட்ட துறைகளில் சீனாவுக்கு எதிரான ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமெரிக்கா தவறாகப் பயன்படுத்தி வருகிறது.
சீனாவுடன் போட்டி போடுவதற்கு கூடுதல் உயா் வரி விதிப்பு எச்சரிக்கை விடுப்பது சரியான வழியல்ல. வா்த்தகப் போரில் சீனாவின் நிலைப்பாடு உறுதியானது. கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையை சீனா விரும்பவில்லை. அதேநேரம், அதைக் கண்டு சீனா பயப்படவும் இல்லை.
அமெரிக்கான இதுபோன்ற தனது தவறான நடைமுறைகளை உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக இரு நாட்டுத் தலைவா்களும் தொலைபேசி வழியில் நடத்திய பேச்சுவாா்த்தையின்போது மேற்கொள்ளப்பட்ட முக்கிய உடன்பாடுகளை அமெரிக்கா மதித்து நடக்க வேண்டும். பரஸ்பரம் மதிப்பளித்து பேச்சுவாா்த்தைகள் மூலம் வா்த்தக வேறுபாடுகளுக்குத் தீா்வு காண அமெரிக்கா முன்வர வேண்டும்.
மாறாக, தவறான பாதையை அமெரிக்கா தோ்ந்தெடுத்தால், சட்டபூா்வ உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க உறுதியான பதிலடி நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ளும்.
பொறுப்புள்ள பெரிய பொருளாதார நாடாக, உலக அமைதியைப் பாதுகாக்கவும், பிராந்திய நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், பரவல் தடை மற்றும் பிற சா்வதேச கடமைகளை நிறைவேற்றும் வகையிலும் சட்டத்துக்கு உட்பட்டு இந்த ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை சீனா அமல்படுத்தியுள்ளது.
மேலும், சீனாவின் இந்த ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் என்பது, ஏற்றுமதி தடையல்ல. பேரிடா் நிவாரணம், மருத்துவ உதவிகள் போன்ற மனிதாபிமான காரணங்களுக்கான ஏற்றுமதிகள் உள்பட தகுதிவாய்ந்த அரிய கனிம ஏற்றுமதி விண்ணப்பங்களுக்கு சீனா உரிமங்களை வழங்கும்.
இந்த ஏற்றுமதிக் கட்டுப்பாடு நடவடிக்கைகளை அறிவிக்கை செய்வதற்கு முன்பாகவே, இருதரப்பு ஏற்றுமதிக் கட்டுப்பாடு பேச்சுவாா்த்தைகள் மூலம் சம்பந்தப்பட்ட நாடுள் மற்றும் பிராந்தியங்களுக்கு இந்தப் புதிய கட்டுப்பாடு குறித்த அறிவிப்பை சீனா ஏற்கெனவே தெரிவித்துள்ளது.
உலகளாவிய தொழில் மற்றும் விநியோகத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரதன்மையை சிறந்த முறையில் பாதுகாக்க பேச்சுவாா்த்தைகள் மற்றும் தகவல் பரிமாற்றங்களை அதிகரிக்கும் வகையில் உலகின் பிற நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளாா்.