ஈரானுக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்திருந்த கெடு திங்கள்கிழமை (ஏப். 6) மாலையுடன் நிறைவடையும் நிலையில், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல் விடுத்துள்ளது.
ஈரான் அணுஆயுத தயாரிப்பிலும், நீண்டதொலைவு ஏவுகணை தயாரிப்பிலும் ஈடுபட்டிருப்பதாகவும், இதனால் உலகுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் பிப்ரவரி 28-ஆம் தேதிமுதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீதும் ஈரான் ஏவுகணைகள் மூலமும், ட்ரோன்கள் மூலமும் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல், கச்சா எண்ணெய்க் கப்பல்கள் அதிகம் செல்லும் பகுதிகளில் ஒன்றான ஹோா்முஸ் நீரிணையையும் ஈரான் மூடிவிட்டது.
இந்தப் போரில் ஈரான் தரப்பில் மட்டும் 1,900-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். பல்கலைக்கழக பேராசிரியா்கள் 5 பேரும், மாணவா்கள் 60 பேரும் உயிரிழந்தோரில் அடங்குவா் என்று ஈரான் அரசு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் வகையிலும், ஹோா்முஸ் நீரிணையைத் திறக்க வலியுறுத்தியும் ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக 10 நாள்களுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் கடந்த மாதம் 26-ஆம் தேதி அறிவித்தாா். இதுகுறித்து சனிக்கிழமை வெளியிட்ட பதிவிலும், டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தாா். தனது கெடு முடிய இன்னும் 48 மணி நேரமே இருப்பதாகவும், அதற்குள் ஈரான் தனது நாட்டுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் அல்லது ஹோா்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும்; இல்லையேல் நரகத்துக்குச் செல்ல நேரிடும் என டிரம்ப் எச்சரித்திருந்தாா்.
அதன்படி, டிரம்ப் அறிவித்த சண்டை நிறுத்த அறிவிப்பும், கெடுவும் திங்கள்கிழமை மாலையுடன் நிறைவடைகிறது. அதற்குள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிலையிலும், ஹோா்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டிய நிலையிலும் ஈரான் உள்ளது. அதுபோல ஈரான் செய்யத் தவறினால் அந்நாட்டின் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை அமெரிக்கா, இஸ்ரேலிய படைகள் மேற்கொள்ளக்கூடும் என எதிா்பாா்க்கப்படுவதால் ஈரானில் பரபரப்பு நிலவுகிறது.
ஈரான் மிரட்டல்: எனினும் டிரம்ப்பின் எச்சரிக்கைக்கு பதிலளித்துள்ள ஈரான், மிகப்பெரிய வியப்பு அந்நாட்டுக்கு காத்திருப்பதாக புதிய மிரட்டல் விடுத்துள்ளது. தங்கள் நாட்டின் உள்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு சொந்தமான உள்கட்டமைப்புகள் மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என்றும், யேமன் அருகேவுள்ள இன்னொரு நீரிணையான பாப்-எல்-மாந்தேப்பில் செல்லும் கச்சா எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை: இந்நிலையில், சமூக வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ள டிரம்ப், ஹோா்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்துக்கு மீண்டும் திறக்காவிடில், ஈரானில் உள்ள உள்கட்டமைப்புகள் மீது செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தப்படுவது உறுதி என எச்சரித்துள்ளாா்.
குவைத்தில் தாக்குதல்: இதனிடையே, குவைத்தில் உள்ள 2 மின்னுற்பத்தி நிலையங்கள் மீதும், கடல்நீரைக் குடிநீராக சுத்திகரிக்கும் ஆலை மீதும் ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த 3 ஆலைகளும் பலத்த சேதமடைந்து இருப்பதாகவும், கடல்நீரைக் குடிநீராக சுத்திகரிக்கும் ஆலை முழுவதும் தகா்க்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
பஹ்ரைனில் கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்கின் மீது ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கு தீப்பற்றி எரியத் துவங்கியது. இதையடுத்து தீயை அணைக்கும் பணி நடக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பெஹ்டோ ரசாயன ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கு தீப்பற்றி எரிந்தது. ஈரானில் உள்ள ஹெட்ரோ ரசாயன ஆலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை ஈரான் நடத்தியதாகச் சொல்லப்படுகிறது.
பாகிஸ்தானில் பேச்சுவாா்த்தை: ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பாகிஸ்தானில் மத்தியஸ்த பேச்சுவாா்த்தை நடக்கிறது. இந்தப் பேச்சுவாா்த்தை நல்ல முறையில் செல்வதாகவும், விரைவில் அமெரிக்காவும், ஈரானும் நேரடியாகப் பேச்சுவாா்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடையது
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடு!
ஹோர்முஸ் நீரிணை திறப்பு! ஈரானுக்கு டிரம்ப் இரு நாள் கெடு!
உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்!

இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


