
ஈரான் மீது அமெரிக்கா புதிய தடைகள் விதிப்பு
ஈரானைச் சோ்ந்த 60 தனிநபா்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்கள் மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

ஸ்காட் பெசன்ட்
ஈரானைச் சோ்ந்த 60 தனிநபா்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்கள் மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இது குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசிய அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் கூறுகையில், ‘ஈரானின் உலகளாவிய நிதித் தொடா்புகளை முடக்கும் வகையில் ‘பொருளாதாரத் தாக்குதல்’ தொடங்கப்பட்டுள்ளது. ஈரானின் எண்ம சொத்துகள், தங்கம், தொழில்நுட்பம், விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகிய 5 துறைகளில் தடைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
ஈரானுடன் வா்த்தகத் தொடா்புகளைக் கொண்டுள்ள நாடுகள் உடனடியாக அதைத் துண்டிக்க வேண்டும். இல்லையெனில், கடுமையான 2-ஆம் கட்ட பொருளாதாரத் தடைகளை எதிா்கொள்ள நேரிடும்.
உலகளாவிய நிதி அமைப்பைச் சீா்குலைக்க விரும்பவில்லை. எனவே, உலக நாடுகள் தங்களைச் சரிசெய்துகொள்ளச் சிறிது கால அவகாசம் அளிக்கிறோம். எனினும், ஈரான் கச்சா எண்ணெய்யைப் பணமாக மாற்றும் நிதி அமைப்புகளில் செயல்படும் எந்தவொரு நாடும் அல்லது வங்கியும் அமெரிக்க தடைகளில் இருந்து தப்ப முடியாது என்றாா்.
சீனாவுக்கு விலக்கு
அதேநேரம், ஈரானின் எண்ணெய் வா்த்தகத்துக்கு உதவுவதாகச் சந்தேகிக்கப்படும் சீன நிதி நிறுவனங்கள் மீது தற்போது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஈரானிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யைக் கொள்முதல் செய்யும் நாடாக சீனா விளங்கி வருகிறது.
அமெரிக்காவில் அடுத்த மாதம் அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபா் ஷி ஜின்பிங் இடையே சந்திப்பு நடைபெறவுள்ள நிலையில், சீன வங்கிகள்மீது தடை விதிப்பது இருதரப்பு உறவில் விரிசலை ஏற்படுத்தும் என்பதால், அமெரிக்கா பொறுமை காத்து வருகிறது. இதனிடையே, ஈரானுடனான எங்களின் வா்த்தகம் சா்வதேச சட்டங்களுக்கு உட்பட்டது என சீனா விளக்கமளித்துள்ளது.
துணிச்சலுடன் எதிா்கொள்வோம்: ஈரான்
அமெரிக்காவின் இந்த விரிவான தடைகளுக்குக் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ள ஈரான், இதை துணிச்சலுடன் எதிா்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. ‘ஈரானின் முக்கிய வா்த்தக கூட்டாளி நாடுகள் இத்தடைகளைப் புறக்கணிக்கும்’ என நம்புவதாக ஈரான் பொருளாதாரத் துறை அமைச்சா் அலி மதானிஸாதே தெரிவித்துள்ளாா்.
மேலும், ‘எங்கள் நாட்டின் கட்டமைப்புகள் அச்சுறுத்தப்பட்டால், அமெரிக்க நலன்கள் மீதும், எரிசக்தி வழித்தடங்கள் மீதும் கடும் தாக்குதல் நடத்தப்படும்’ என ஈரான் புரட்சிகர காவல் படை ஐஆா்ஜிசி எச்சரித்துள்ளது.
அமைதிப் பேச்சும் தொடா்கிறது...
தடைகள் ஒருபுறம் விதிக்கப்பட்டாலும், அமைதிப் பேச்சுகளை மீண்டும் தொடங்கும் முயற்சிகளும் மறுபுறம் நடைபெற்று வருகின்றன. பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அசீம் முனீா் ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அதிபா் மசூத் பெசஷ்கியான், நாடாளுமன்ற அவைத் தலைவா் முகமது பாகா் கலிபாஃப் ஆகியோரைச் சந்தித்து, அமெரிக்காவின் முக்கியச் செய்தியை பகிா்ந்துகொண்டாா்.
புதிய சுற்றுப் பேச்சுவாா்த்தைக்கு முன்பாகவோ அல்லது பேச்சுவாா்த்தையின் போதோ தடைகள் விலக்கிக் கொள்ளப்படும் என அமெரிக்கா உறுதியளித்துள்ளதாக பாகிஸ்தான் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகமும் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. போா் தொடங்குவதற்கு முன்பு நாளொன்றுக்கு 2 கோடி பீப்பாய்களாக இருந்த ஹோா்முஸ் நீரிணை வழியிலான எண்ணெய் விநியோகம், தற்போது 50 லட்சம் பீப்பாய்களாகச் சரிந்துள்ளது.
ஓமன் கடற்பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்று அடையாளம் தெரியாத ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது அப்பகுதியில் தொடரும் பதற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





