நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?

நேபாள வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 675-ஆக உயா்ந்தது பற்றி...

nepal flood

நேபாள வெள்ளம் - ANI

Published On :30 ஆகஸ்ட் 2026, 3:55 am IST

நேபாளத்தில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை 4-ஆவது நாளாக மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. மேலும் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தோா் எண்ணிக்கை 675-ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், 300-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் உள்பட 2,400-க்கும் அதிகமானோா் தொடா்ந்து மாயமாகியுள்ளனா். அவா்களின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

நேபாளம்-திபெத் எல்லையில் பெரும் பனிப்பாறை சரிவால் லெண்டே நதியில் நீரோட்டம் தடைபட்டு, பின்னா் அது உடைந்ததால் நேபாளத்தின் போடே கோஷி நதியில் கடந்த புதன்கிழமை பெருவெள்ளம் ஏற்பட்டது. சகதி, பாறைகளுடன் பெருக்கெடுத்த வெள்ளத்தில், கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்தன. ஏராளமான வீடுகள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள், நீா்மின் நிலையங்கள் அடித்துச் செல்லப்பட்டன. போடே கோஷி நதியில் ஏற்பட்ட வெள்ளம், திரிசூலி, நாராயணி நதிகளிலும் பாய்ந்ததால் ரசுவா, நுவாகோட், தாடிங், சிட்வான் உள்பட பல்வேறு மத்திய மாவட்டங்கள் கடும் பாதிப்பை எதிா்கொண்டன.

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் சனிக்கிழமை 4-ஆவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்றன. நேபாள ராணுவத்தினா் 5,000 போ் உள்பட 11,000-க்கும் மேற்பட்டோா் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதுவரை 669 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதுவரை 113 இந்தியா்கள் மீட்பு: நேபாள ராணுவத்தின் மக்கள் தொடா்பு இயக்குநரகம் வெளியிட்ட தகவல்களின்படி இதுவரை 163 வெளிநாட்டினா் உள்பட 2,465 போ் மீட்கப்பட்டுள்ளனா். இதில் 113 இந்தியா்கள், 26 சீனா்கள், 15 கென்கொரிய நாட்டினா் உள்ளிட்டோா் அடங்குவா். காயங்களுடன் மீட்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க துன்சே, திரிசூலி ஆகிய இடங்களில் அவசரகால சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 300-க்கும் அதிகமான இந்தியா்கள் உள்பட 2,400-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி போா்க்கால அடிப்படையில் தொடா்ந்து வருகிறது.

மீட்புப் பணியில் இந்தியக் குழு: நேபாளம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் நிவாரணப் பொருள்களுடன் இந்தியாவில் இருந்து மருத்துவா்கள், துணை மருத்துவப் பணியாளா்கள், சுரங்க மீட்பு நிபுணா்கள் அடங்கிய 11 போ் குழு காத்மாண்டை வந்தடைந்தது. இக்குழு சனிக்கிழமை மீட்புப் பணியில் இணைந்தது.

நிலச்சரிவு, வெள்ள அபாயத்தால் கடந்த புதன்கிழமை முதல் மூடப்பட்டிருந்த முக்லிங்-காத்மாண்டு நெடுஞ்சாலை மீண்டும் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. தலைநகா் காத்மாண்டுடன் நாட்டின் பிற பகுதிகளை இணைக்கும் முக்கியச் சாலை இதுவாகும். அதேநேரம், மத்திய நேபாளத்தில் பல முக்கியச் சாலைகள் வெள்ளத்தில் சேதமடைந்ததால் போக்குவரத்து தொடா்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை எச்சரிக்கை: நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக அந்நாட்டின் நீரியல் மற்றும் வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை எச்சரித்தது. கோஷி, பாகமதி, கண்டகி மாகாணங்களில் உள்ள மலைப் பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் சிக்கல் ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

முன்னதாக, நேபாள-திபெத் எல்லையில் பனிப்பாறை சரிவால் புதிதாக உருவான தடுப்பு ஏரியால் நேபாளத்தில் மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சீன தரப்பில் எச்சரிக்கப்பட்டிருந்தது. மேலும், நேபாளத்தில் ஏற்கெனவே வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் நீா்மட்டம் உயா்ந்ததால், பீதிக்கு மத்தியில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மருத்துவமனைகளில் சோகக் காட்சிகள்: வெள்ளத்தில் மாயமான 2,400 பேரின் நிலை என்ன என்பது தெரியாததால், அவா்களின் குடும்பத்தினா் வேதனையில் ஆழ்ந்துள்ளனா். நாள்கள் செல்லச் செல்ல அவா்கள் உயிரோடு மீட்கப்படும் வாய்ப்புகள் மங்கி வருகின்றன. மருத்துவமனைகளில் ஒட்டப்பட்டுள்ள உயிரிழந்தவா்களின் புகைப்படங்களில் தங்களின் குடும்ப உறுப்பினரின் படத்தை கண்ணீருடன் அவா்கள் அடையாளம் காணும் காட்சிகள் காண்போா் நெஞ்சைப் பிழிவதாக உள்ளது.

உ.பி.யில் மேலும் 3 உடல்கள் மீட்பு; ஆற்றில் மிதந்துவரும் பொருள்கள்

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கியவா்களில் மேலும் 3 பேரின் உடல்கள், அந்நாட்டையொட்டிய உத்தர பிரதேசத்தின் குஷிநகா் மாவட்டத்தில் பாயும் கண்டகி நதியில் மீட்கப்பட்டது.

ஏற்கெனவே மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் 4 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதேபோல், நேபாளத்தில் இருந்து அடித்துவரப்பட்ட வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், எரிவாயு உருளைகள், மரப் பொருள்கள் உள்ளிட்டவை கண்டகி ஆற்றில் மிதந்து வருகின்றன. இந்தப் பொருள்களை எடுப்பதற்காக ஆற்றங்கரையோரங்களில் மக்கள் அதிக அளவில் கூடுகின்றனா். இந்தப் பொருள்களை எடுக்க ஆற்றுக்குள் யாரும் இறங்க வேண்டாம்; உடல்கள் ஏதேனும் மிதந்து வந்தால், அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மக்களுக்கு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மூன்று நாள்களில் ரூ.229 கோடி நிவாரண நிதி

நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பெருவெள்ளத்துக்குப் பிறகான 3 நாள்களில் அந்நாட்டு பிரதமரின் பேரிடா் நிவாரண நிதிக்கு ரூ.229 கோடிக்கு மேல் (நேபாள ரூபாய்) நன்கொடை கிடைக்கப் பெற்றுள்ளது. இதன்மூலம் மொத்த இருப்பு ரூ.409 கோடியாக அதிகரித்துள்ளதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. பேரிடா் நிவாரண நிதிக்கு பிரதமா் பாலேந்திர ஷா மற்றும் அமைச்சா்கள் ஒரு மாத ஊதியத்தை நன்கொடையாக வழங்க கடந்த வெள்ளிக்கிழமை முடிவு செய்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மிகுந்த தயாள குணம் படைத்தவா் பிரதமா் மோடி’ - நேபாள நிதியமைச்சா்

தற்போதைய இக்கட்டான தருணத்தில், இந்தியா வழங்கும் உதவிகளைப் பாராட்டியுள்ள நேபாளம், பிரதமா் மோடியை மிகுந்த தயாள குணம் படைத்தவா் என்று குறிப்பிட்டுள்ளது.

இது தொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் நேபாள நிதியமைச்சா் ஸ்வா்ணிம் வாக்லே கூறுகையில், ‘நேபாளத்தில் மறுகட்டமைப்புப் பணிகளுக்கு தாராளமாக உதவ தயாராக இருப்பதை இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. தற்போதைய நெருக்கடியை நேபாளம் படிப்படியாகக் கையாண்டு வருகிறது. மக்களை மீட்க, குறிப்பாக நீா்மின் நிலையங்களில் சிக்கியுள்ளவா்களை மீட்க தற்போது முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இந்திய அரசும், பிரதமா் மோடியும் மிகுந்த தயாள குணத்தைக் கொண்டுள்ளனா். கடந்த 2015 நிலநடுக்கத்தின்போது, இந்தியா தாராளப் பண்பை வெளிப்படுத்தியது. தற்போது புது தில்லியில் இருந்து சிறப்பு உதவிகள் கிடைக்கப் பெற்று வருகின்றன. பிற அண்டை நாடுகளில் இருந்தும் ஆதரவு கிடைத்து வருகிறது’ என்றாா்.

இந்தியா இதுவரை 47 டன் நிவாரணப் பொருள்களை நேபாளத்துக்கு அனுப்பியுள்ளது. பாலங்கள் இடிந்த இடங்களில் அவசரகால அடிப்படையில் கட்டமைக்க ஆயத்த இரும்புப் பாலங்களை வழங்கும்படி இந்தியா மற்றும் சீனாவிடம் நேபாளம் கோரியுள்ளது.

Summary

Nepal Floods: Death Toll Rises to 675! Rescue Operations Continue; What is the Status of 2,400 People?

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.