
நேபாள வெள்ளம்! குவியும் சடலங்கள்... நிரம்பி வழியும் சவக்கிடங்குகள்!
நேபாள வெள்ளப் பேரழிவால் நூற்றுக்கணக்கான சடலங்கள் வெவ்வேறு மாவட்டங்களில் மீட்கப்பட்டது தொடர்பாக...

நேபாள வெள்ளம் - X
நேபாளத்தில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் அதிகளவில் மீட்கப்படுவதால் சவக்கிடங்கில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், தற்காலிக உடல் சேமிப்பு மையங்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நேபாளத்தைப் புரட்டிப்போட்ட பெருவெள்ளம் அந்த மாநிலத்தையே சூறையாடியது. இதனால், பல கிராமங்கள், கட்டடங்கள் கூண்டோடு சுருட்டி எடுத்துச் சென்றது. பலரின் உடல்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 362-ஆக அதிகரித்துள்ளது.
இந்தியர்கள் 290 பேர் உள்பட வெள்ளத்தில் மாயமான 1,500 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நேபாள தேசிய பேரிடர் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.
இந்த நிலையில், ரசுவா மற்றும் நுவாகாட் பகுதிகளில் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள், சித்வான், தனஹுன், நவல்பராசி, கோர்கா மற்றும் பிற மாவட்டங்கள் வரை வெகு தொலைவில் மீட்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் உள்ள பிரேத அறைகளில் இடவசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
திபெத்தின் ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி நதியில் முதலில் பெருக்கெடுத்த வெள்ளம், பின்னர் திரிசூலி, நாராயணி நதிகளிலும் பாய்ந்ததால், நுவாகாட், தாடிங் உள்பட பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தன. இதனால் உயிர்ச்சேதங்கள் மட்டுமின்றி, குடியிருப்புகள், சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்மின் நிலையங்கள் பெரும் சேதமடைந்தது.
மருத்துவமனைகளில் உள்ள பிரேத அறைகளை விட மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள சித்வான், பாரத்பூரில் தற்காலிக உடல் சேமிப்பு மையத்தை அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
வியாழக்கிழமை சித்வான் மாவட்ட முதன்மை அதிகாரி கணேஷ் ஆர்யால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பாரத்பூர் பெருநகர மாநகராட்சி -10-ல் உள்ள 'தொழில்துறை நிறுவன மேம்பாட்டுக் கழகத்தின் பயன்பாட்டில் இல்லாத கட்டடம் உடல்களைச் சேமித்துவைக்கும் இடமாக மாற்றப்படவுள்ளது.
இன்று அதிகாலையிலிருந்து திரிசூலி, நாராயணி நதிகளின் சித்வான் பகுதிக்கு உள்பட்ட ஃபிஷ்லிங் மற்றும் கோலாகாட் இடையே 137 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மீட்கப்படும் உடல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் தங்கள் உறவினர்களைத் தேடி ரசுவா, நுவாகாட், கோர்கா மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து சித்வானுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
சித்வானில் உள்ள மருத்துவமனைகளின் பிரேத அறைகளில் மொத்தம் 30 முதல் 50 உடல்கள் வரை மட்டுமே வைக்க முடியும். எனவே, புதிதாக ஒதுக்கப்படும் தற்காலிக மையத்தில் சுமார் 250 உடல்களை வைப்பதற்கான வசதி இருக்கும் என்று தெரிவித்தார்.
அந்தக் கொள்ளளவையும் தாண்டி உடல்கள் வந்தால், கூடுதல் வசதியாக தேவ்காட்டில் உள்ள மின் மயானத்தைப் பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பாரத்பூர் பெருநகர மாநகராட்சி நிர்வாகம் இந்தத் தற்காலிக மையத்தைப் பழுதுபார்த்துத் தேவையான வசதிகளுடன் தயார் செய்து வருகிறது.
சடலங்கள் நிரப்பிவைக்கப்படும் அறைகளுக்குள் ஏர் கண்டிஷனர்களைப் பொருத்துதல் மற்றும் உடல்கள் சிதைவடைவதைத் தாமதப்படுத்த உலர் பனிக்கட்டியைப் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
காவல்துறையினர் சடலங்களைப் புகைப்படம் எடுத்தல், கைரேகைகளைப் பதிவு செய்தல், உடற்கூறு ஆய்வு செய்தல், டிஎன்ஏ மாதிரிகளைச் சேகரித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். குடும்பத்தினர் தங்கள் உறவினர்களை அடையாளம் காண உதவும் வகையில், அங்கங்கு புகைப்படங்கள் பொதுவெளியில் வெளியிடப்படுகின்றன.
அடையாளம் காணப்படாத சடலங்களைக் காலவரையின்றி வைத்திருக்க முடியாது என்றும், உறவினர்களைக் கண்டறிய முடியாத பட்சத்தில் பாதுகாப்பான அடக்கம் செய்யும் இடங்களை ஒதுக்க அதிகாரிகள் தயாராகி வருவதாகவும் காஸ்கி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நபின் கார்க்கி தெரிவித்தார்.
ஒவ்வொரு சடலத்திற்கும் ஒரு அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்காலத்தில் அடையாளம் காண்பதற்கு, அடக்கம் செய்வது தொடர்பான விவரங்கள் பதிவு செய்வதற்கு இந்த அடையாள எண் பயன்படும் என்றும் அவர் கூறினார்.
Bodies of people swept away by the devastating Bhote Koshi floods in Nepal are being recovered far downstream, overwhelming morgues and forcing authorities to set up temporary facilities to store and identify the remains, according to a media report.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







