
ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது மீண்டும் அமெரிக்கப் படைகள் நடத்தியுள்ள தாக்குதல் குறித்து...

ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் - கோப்புப்படம்
வாஷிங்டன்: ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது மீண்டும் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. இது கடந்த ஒரு மாதத்தில் அமெரிக்கா மேற்கொண்ட முதல் ராணுவ நடவடிக்கையாகும்.
நீரிணையில் உள்ள லாரக் தீவுக்கு அருகே வெடிப்பு சப்தங்கள் கேட்டதாகவும், தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கடல் கண்ணிவெடிகளுடன் கூடிய ராக்கெட்டுகளை நீரிணையை நோக்கி ஏவ 'ரெவல்யூஷனரி கார்ட் கார்ப்ஸ்' படையினர் தயாராவதைக் கண்டதாகவும், இதனை தடுப்பதற்காக தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளையின் செய்தித் தொடர்பாளர் டிம் ஹாக்கின்ஸ் தெரிவித்தார்.
நீரிணையின் சர்வதேச கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் இருந்த கடல் கண்ணிவெடிகளை அகற்றும் பணியை அமெரிக்க ராணுவம் கடந்த வாரம் நிறைவு செய்திருந்தது.
ஈரானின் அரசு ஒலிபரப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "எங்கள் போராளிகள் மற்றும் நாட்டு மக்கள் பலரின் வீரமரணம் மற்றும் காயங்கள்" குறித்து 'கார்ட்' அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதல்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தண்டனையை பெற்றுத் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஜோர்தானில் உள்ள கிங் ஹுசைன் மற்றும் அல் அஸ்ராக் ஆகிய அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகக் கூறப்படும் காட்சிகளையும் ஈரானிய அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
அமெரிக்க தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகளை ஏற்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
திங்கள்கிழமை அதிகாலை நாட்டின் வான்வெளியில் நுழைந்த எட்டு ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக ஜோர்தான் ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளன.
பிப்ரவரி 28 ஆம் தேதி போர் தொடங்கியதிலிருந்து வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை ஈரான் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மீண்டும் வெளிப்படையான மோதல் ஏற்படுவது இந்த பகுதிக்கு ஆபத்தானதாக அமையும் என அஞ்சப்படுகிறது.
ஈரானைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதை அமெரிக்க ராணுவம் கடைசியாக ஜூலை 29 ஆம் தேதி உறுதிப்படுத்தியது; அப்போது கடற்கரை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புத் தளங்கள் உள்பட 'ரெவல்யூஷனரி கார்ட்' அமைப்பின் இலக்குகள் மீது "கடுமையான தாக்குதல்கள்" நடத்தப்பட்டதாக அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர, வளைகுடா நட்பு நாடுகளின் தலைவர்கள் தங்களது மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.
ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ராணுவ நடவடிக்கைக்குப் பதிலாக பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்போவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்த சில நாள்களிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இந்த உத்தி மாற்றம், தெஹ்ரானுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடு அல்லது அமைப்பையும் தண்டிப்பதாக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை மையமாகக் கொண்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதல், "பொருளாதாரப் போரின் போது டிரம்ப் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு கொடிய தவறு" என்றும், அதன் விளைவுகளை ராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பதிலடி கொடுக்கப்படும் என்று பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் ஜெனரல் ஹொசைன் மொஹேபி, ஈரானிய ஊடகங்களுக்கு வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
Summary
US forces struck Iranian rocket launchers on the Strait of Hormuz in their first military action in a month on Sunday
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





