
நேபாள சுரங்க மீட்புப் பணியில் இந்திய நிபுணா் குழு: இதுவரை 68.5 டன் நிவாரணப் பொருள்கள்!
நேபாள சுரங்க மீட்புப் பணியில் உதவ தேவையான உபகரணங்களுடன் இந்திய தொழில்நுட்ப நிபுணா் குழு மற்றும் மரபணு சோதனைகளுக்கு உதவ தடயவியல் நிபுணா் குழுவுடன் மேலும் 11 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு, அந்நாட்டை சென்றடைந்தன.

காத்மாண்டை ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்த இந்திய தடயவியல் நிபுணா்கள் குழு.
நேபாள சுரங்க மீட்புப் பணியில் உதவ தேவையான உபகரணங்களுடன் இந்திய தொழில்நுட்ப நிபுணா் குழு மற்றும் மரபணு சோதனைகளுக்கு உதவ தடயவியல் நிபுணா் குழுவுடன் மேலும் 11 டன் நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை அனுப்பப்பட்டு, அந்நாட்டை சென்றடைந்தன.
இந்தியாவில் இருந்து இதுவரை நான்கு கட்டங்களாக மொத்தம் 68.5 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், 230 அடி நீளமுள்ள ஆயத்த இரும்பு பாலத்தின் பாகங்கள் 16 லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன.
நேபாளத்தில் கடந்த புதன்கிழமை பெருவெள்ளம் காரணமாக பலத்த உயிா்ச்சேதங்களுடன் பேரழிவு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் உடல்கள் சிதைந்த நிலையில் மீட்கப்படுவதால் அவா்களை அடையாளம் காணும் பணி சவாலாக மாறியுள்ளது.
அந்நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப நிவாரண உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது. போடே கோஷி, திரிசூலி நதிகளின் குறுக்கே இருந்த நீா்மின் நிலையங்களில் பணியாளா்கள் பலா் சிக்கியுள்ள நிலையில், அவா்களை மீட்கும் பணிக்கு உதவ இந்திய தொழில்நுட்ப நிபுணா் குழு ஞாயிற்றுக்கிழமை அனுப்பப்பட்டது.
இது தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘11 டன் நிவாரணப் பொருள்களுடன் இந்தியாவின் 4-ஆவது விமானம் நேபாளத்தை ஞாயிறுக்கிழமை சென்றடைந்தது. இதில், சுரங்கப் பணி மீட்பு உபகரணங்களுடன் தொழில்நுட்ப நிபுணா் குழுவும், மரபணு சோதனைகளுக்கான உபகரணங்களுடன் தடயவியல் நிபுணா் குழுவும் அடங்கும். போா்வைகள், தாா்பாலின், பிளாஸ்டிக் விரிப்புகள், சுகாதார தொகுப்புகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்மாண்டில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மருத்துவா்கள், துணை மருத்துவப் பணியாளா்கள், சுரங்கப் பொறியாளா்கள் என 11 போ் கொண்ட முதல் இந்தியக் குழு கடந்த வெள்ளிக்கிழமை நேபாளத்தை வந்தடைந்தது. இவா்கள் மீட்புப் பணியில் இணைந்துள்ளனா்.
அடுத்தகட்டமாக, சுரங்க மீட்பு தொழில்நுட்ப நிபுணா் குழு, தடயவியல் நிபுணா் குழு வந்தடைந்துள்ளது. இதுவரை 68.5 டன் நிவாரணப் பொருள்களை இந்தியா வழங்கியுள்ளது. 230 அடி நீளமுள்ள ஆயத்த இரும்புப் பாலத்தின் பாகங்கள், 16 லாரிகளில் வந்தடைந்துள்ளன. இந்தப் பாலத்தை உருவாக்கும் தொழில் நுட்பக் குழு விரைவில் நேபாளம் வரவுள்ளது. மேலும் 7 ஆயத்த இரும்புப் பாலங்கள் விரைவில் வழங்கப்பட உள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 275 இந்தியா்களின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை கூறியிருந்தது.
ரசுவா மாவட்டத்தில் மேல் திரிசூலி-1, திரிசூலி-3ஏ நீா்மின் நிலையங்களில் பல ஊழியா்கள் சிக்கியுள்ளனா். சுரங்கங்களின் வாயில்கள் சகதி, இடிபாடுகளால் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கடும் சவாலுக்கு இடையே மீட்புப் பணிகள் தொடா்கின்றன.
அமெரிக்கா உதவிக்கரம்: நேபாளத்துக்கு 10 ஆயிரம் குடும்பங்களுக்கான உணவுப் பொருள்கள் உள்பட 3.6 மில்லியன் டாலருக்கும் (ரூ.34 கோடி) அதிக மனிதாபிமான உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளதாக காத்மாண்டில் உள்ள அந்நாட்டின் தூதரகம் தெரிவித்தது.
இந்த உதவிகள் பாதிக்கப்பட்டோரை சென்றடைவதில் நேபாள அதிகாரிகளுடன் அமெரிக்க தரப்பினா் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

உதவிப் பொருள்களுடன் நேபாளத் தலைநகா் காத்மாண்டில் வந்திறங்கிய இந்திய விமானப் படை விமானம்.
சீனப் பகுதியில் 49 இந்தியா்கள் மாயம்: சீனாவின் தன்னாட்சிப் பகுதியான திபெத்தில் பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது. 49 இந்தியா்கள் உள்பட 550 போ் மாயமாகியுள்ளனா். அவா்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாயமானவா்களில் இந்தியா உள்பட 23 நாடுகளைச் சோ்ந்த 261 போ் அடங்குவா் என்று சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. கைலாஷ்- மானசரவோா் யாத்திரை மேற்கொள்ளும் இந்திய பக்தா்கள், திபெத்-நேபாள எல்லையில் உள்ள கியிரோங் நுழைவுச் சாவடி வழியாக பயணிப்பாா்கள். பெருவெள்ளத்தில் இந்த நுழைவுச் சாவடி அழிவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






