

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இருநாடுகளுக்கு இடையில் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி விமான சேவைகள் துவங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் இருந்து வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவுக்கு, வரும் ஜன. 29 ஆம் தேதி முதல் நேரடி விமானங்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வாரம்தோறும் வியாழன் மற்றும் சனிக்கிழமை ஆகிய இருநாள்கள் மட்டும் இந்த விமான சேவைகள் இயக்கப்படவுள்ளன.
டாக்காவில் இருந்து இரவு 8 மணிக்குப் புறப்படும் விமானம் கராச்சி நகரத்துக்கு இரவு 11 மணியளவில் வந்தடையும் எனவும், மீண்டும் கராச்சியில் இருந்து இரவு 12 மணிக்குப் புறப்படும் விமானம் டாக்காவுக்கு அதிகாலை 4.20 மணிக்கு வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்கா மற்றும் கராச்சி இடையில் குறுகியப் பாதையில் விரைவாக இந்திய வான்வழியாக மட்டுமே செல்ல முடியும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்திய வான்வழியைப் பயன்படுத்த வங்கதேச அதிகாரிகள் மத்திய அரசிடம் அனுமதி பெற்றார்களா என்பது குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்க்கப்பட்டது முதல் பாகிஸ்தான் உடனான உறவுகளை வங்கதேச இடைக்கால அரசு மேம்படுத்தி வருகின்றது.
கடந்த 2025 ஆகஸ்டில் வங்கதேசம் சென்ற பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார், இருநாடுகளுக்கும் இடையில் விமான சேவைகள் விரைவில் துவங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இதையடுத்து, 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு டாக்கா மற்றும் கராச்சி இடையில் நேரடி விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.