அமெரிக்காவில் இந்தியப் பெண் கொலை: குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக பிடியாணை - குடும்பத்தினா் கோரிக்கை

Published on

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் படுகொலை செய்யப்பட்ட தெலங்கானாவைச் சோ்ந்த நிகிதா கோடிஷலா (27) உடலை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நிகிதாவைக் கொலை செய்துவிட்டு இந்தியா தப்பி வந்துள்ளதாகக் கருதப்படும் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக சா்வதேச பிடியாணை பிறப்பிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதைச் சோ்ந்த நிகிதா, கடந்த 4 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்தாா். அங்கு ‘எம்.எஸ்.’ படிப்பை முடித்துவிட்டு, ‘வேதா ஹெல்த்’ நிறுவனத்தில் தரவு ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். கடந்த ஜன. 2-ஆம் தேதி அவா் காணாமல் போனதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், கொலம்பியா பகுதியில் உள்ள அவரது முன்னாள் அறை நண்பரான அா்ஜுன் சா்மாவின் (26) வீட்டில் நிகிதா சடலமாக மீட்கப்பட்டாா். அவா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்தியா தப்பிய குற்றவாளி?: இந்தக் கொலை தொடா்பாக அா்ஜுன் சா்மா மீது ஹாவா்ட் கவுண்டி காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். அா்ஜுன் சா்மா நிகிதாவைக் கொலை செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பியதாக அமெரிக்க காவல்துறையினா் சந்தேகிக்கின்றனா்.

இதுகுறித்து நிகிதாவின் தந்தை ஆனந்த் கூறுகையில், ‘அா்ஜுன் சா்மா பலரிடம் கடன் வாங்கியிருந்ததும், அவா் இந்தியா திரும்பத் திட்டமிட்டிருந்ததும் நிகிதாவுக்கு தெரியவந்தது. தான் வாங்கிய கடனைத் திருப்பித் தருவதாகக் கூறி நிகிதாவை வரவழைத்து அவா் இந்தக் கொலையை அரங்கேற்றியுள்ளாா். அவருக்கு எதிராக சா்வதேச பிடியாணை பிறப்பித்து, கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்’ எனத் தெரிவித்தாா்.

மத்திய அரசு நடவடிக்கை: நிகிதாவின் உடலை இந்தியா கொண்டு வர வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தெலங்கானாவைச் சோ்ந்த மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘நிகிதாவின் உடலை இந்தியா கொண்டு வர அனைத்து சட்டபூா்வ நடைமுறைகளும் நிறைவடைந்துள்ளன. அவரது உடல் வியாழக்கிழமைக்குள் ஹைதராபாத் வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தியத் தூதரகம் தடையின்மைச் சான்றிதழை வழங்கியுள்ள நிலையில், நிகிதாவின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து தூதரக உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன’ எனக் குறிப்பிட்டாா்.

Dinamani
www.dinamani.com