பாகிஸ்தான்: துப்பாக்கிச்சூட்டில் அமைதிக் குழுவினா் 4 போ் கொலை

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில், அடையாளம் தெரியாத நபா்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உள்ளூா் அமைதிக் குழுவைச் சோ்ந்த 4 உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டனா்.
Published on

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில், அடையாளம் தெரியாத நபா்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உள்ளூா் அமைதிக் குழுவைச் சோ்ந்த 4 உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டனா்.

வடக்கு வஜிரிஸ்தான் எல்லையொட்டிய பன்னு மாவட்டத்தில், மசாங் சௌக் பகுதிக்கு அருகே அமைதிக் குழு உறுப்பினா்கள் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா். அப்போது, அங்கு மறைந்திருந்த நபா்கள் திடீரென அவா்களை வழிமறித்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனா். இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் காவல் துறையினரும், பாதுகாப்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து, அந்தப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா். தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

அதிகரிக்கும் பயங்கரவாதம்...: பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா, பலூசிஸ்தான் ஆகிய மாகாணங்களில் கடந்த சில காலமாக பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, காவல் துறையினா் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

முன்னதாக கடந்த திங்கள்கிழமை, கைபா் பக்துன்கவா மாகாணத்தில் காவல் துறை வாகனத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஓா் உயரதிகாரி உள்பட 6 காவலா்கள் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பொதுமக்களில் ஒருவரும் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Dinamani
www.dinamani.com