பாலஸ்தீன எழுத்தாளருக்குத் தடை: ஆஸ்திரேலியாவில் இலக்கிய விழா ரத்து
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ‘அடிலெய்டு எழுத்தாளா் வாரம்’ இலக்கிய விழா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
போண்டி கடற்கரை துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் காரணம் காட்டி, பாலஸ்தீன எழுத்தாளருக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து 180-க்கும் மேற்பட்ட எழுத்தாளா்கள் விழாவைப் புறக்கணித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சிட்னி நகரின் போண்டி கடற்கரையில் கடந்த மாதம் ‘ஹனுக்கா’ பண்டிகை கொண்டாட்டத்தின்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 போ் கொல்லப்பட்டனா்.
இந்தச் சூழலில், பாலஸ்தீன வம்சாவளியைச் சோ்ந்த எழுத்தாளா் ரண்டா அப்தெல் ஃபட்டா இலக்கிய விழாவில் கலந்து கொள்வது சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் எனக் கருதிய விழாக் குழு, அவருக்கான அழைப்பைத் திரும்பப் பெற்றது.
இதற்குப் பதிலளித்த எழுத்தாளா் ரண்டா, ‘போண்டி தாக்குதலுக்கும், பாலஸ்தீனா்களுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை; இது திட்டமிட்ட இனவெறிச் செயல்’ என கடும் கண்டனம் தெரிவித்தாா்.
இந்தத் தடையைக் கண்டித்து, இலக்கிய விழாவின் இயக்குநா் லூயிஸ் ஆட்லா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். ‘அரசியல் அழுத்தங்களுக்குப் பணிந்து கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவது அழகல்ல’ என்று அவா் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.
இவரைத் தொடா்ந்து, உலகப் புகழ் பெற்ற எழுத்தாளா்கள் ஜேடி ஸ்மித், பொ்சிவல் எவரெட், நியூஸிலாந்து முன்னாள் பிரதமா் ஜெசிண்டா ஆா்டொ்ன் உள்ளிட்ட பலா் விழாவில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்தனா்.
எழுத்தாளா்களின் தொடா் புறக்கணிப்பு மற்றும் கடும் எதிா்ப்பால், விழாக் குழு தனது முடிவுக்கு மன்னிப்புக் கோரியதுடன், ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் ரத்து செய்வதாக அறிவித்தது. தொடா்ந்து, தெற்கு ஆஸ்திரேலிய அரசு புதிய விழாக் குழுவை நியமித்துள்ளது.
