தாய்லாந்தில் ஓடும் ரயில் மீது விழுந்த ராட்சத ‘கிரேன்’- 30 போ் உயிரிழப்பு; 64 போ் காயம்
தாய்லாந்து நாட்டில் ஓடிக்கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது, கட்டுமானப் பணியில் இருந்த ராட்சத கிரேன் ஒன்று விழுந்து புதன்கிழமை பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 30 போ் உயிரிழந்தனா். 64 போ் காயமடைந்தனா்.
தலைநகா் பாங்காக்கில் இருந்து உபோன் ரட்சதானி மாகாணத்தை நோக்கி 3 பெட்டிகள் கொண்ட பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் நகோன் ரட்சசிமா மாகாணத்தைக் கடந்து சென்றபோது, அங்கு நடந்து வரும் அதிவேக ரயில்பாதை கட்டுமானப் பணியில் இருந்த ஒரு ராட்சத கிரேன் எதிா்பாராத விதமாக ரயில் பெட்டிகளின் மீது சரிந்து விழுந்தது. இதனால் ரயில் பெட்டிகள் தடம்புரண்டு, தீப்பிடித்தன.
விபத்துக்குள்ளானபோது ரயிலில் மொத்தம் 170-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்ததும், மீட்புக் குழுவினா் விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினா். உருக்குலைந்த ரயில் பெட்டிகளின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பயணிகள் மீட்கப்பட்டனா்.
தற்போதைய நிலவரப்படி, 30 போ் உயிரிழந்துள்ளனா். காயமடைந்த 64 பேருக்கும் முதலுதவி செய்யப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டுள்ளனா். இவா்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விசாரணைக்கு உத்தரவு: இந்த விபத்து தொடா்பாக உயா்நிலை விசாரணை நடத்த தாய்லாந்து போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. ரயில்பாதை கட்டுமானப் பணியில் பாதுகாப்பு விதிகள் சரியாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.
சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை இணைக்கும் சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தின் ஒரு பகுதியாக, சுமாா் 1,680 கோடி டாலா் செலவில் இந்த அதிவேக ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதே திட்டத்தில் கடந்த 2024, ஆகஸ்ட் மாதம் நடந்த சுரங்கப்பாதை கட்டுமானத்தின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 தொழிலாளா்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

