

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான் மீது சர்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அந்த நாட்டின் அணுசக்தித் திட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், தற்போது ஆட்சி மாற்றத்தைக் கோரும் மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. தலைநகர் டெஹ்ரான், புனித நகரான மஷ்ஹாத் ஆகிய இடங்களில் போராட்டங்கள் மிகவும் தீவிரமடைந்துள்ளன.
ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்து பொதுமக்கள் அனைவரும் தெருக்களில் இறங்கி தங்களது போராட்டத்தை தொடங்கிய நிலையில், அமெரிக்காவுக்கு எதிராகப் பேசிவந்த வெனிசுவேலா அதிபர் மதுரோவை அந்த நாட்டுக்குள்ளேயே நுழைந்து அமெரிக்க ராணுவத்தினர் கைது செய்த சம்பவம் ஈரான் போராட்டக்காரர்களுக்கு மேலும் உத்வேகம் அளித்துள்ளது.
இந்தச் சூழலில், போராட்டக்காரர்கள் மீது ஈரான் அரசு மேற்கொள்ளும் அடக்குமுறைக்கு எதிராகவும், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் மிகப் பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
2 வது வாரத்தை எட்டியுள்ள இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இதுவரை அரசு சார்ந்த 135 பேர் உள்பட சுமார் 2,400 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். சுமார் 10,700 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஈரானில் இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளதால், கள நிலவரத்தை அறிவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
இந்த நிலையில், போராட்டக்காரர்கள் தூக்கிலிடப்பட்டால் “மிகவும் கடுமையான நடவடிக்கை” எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் எச்சரிக்கைக்கு ஈரானின் தலைமையும் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டிருந்த பதிவில், “ஈரானிய மக்களே, தொடர்ந்து போராடுங்கள். உங்கள் அமைப்புகளைக் கைப்பற்றுங்கள்! கொலைகாரர்கள் மற்றும் கொடுமைக்காரர்களின் பெயர்களைப் பதிவு செய்து வையுங்கள். அவர்கள் பெரும் அதற்கு விலையைக் கொடுக்கப் போகிறார்கள்.
போராட்டக்காரர்களின் மீதான கொலைகள் நிறுத்தப்படும்வரை ஈரானிய அதிகாரிகளுடனான எனது அனைத்து சந்திப்புகளையும் நான் ரத்து செய்துள்ளேன். உதவி வந்துகொண்டிருக்கின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனை மறுபதிவிட்டு, டிரம்ப்பின் பேச்சுக்கு ஈரான் தரப்பில் இருந்து கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரான் நாடாளுமன்ற முன்னாள் அவைத் தலைவரும், தற்போதைய தேசிய பாதுகாப்பு செயலருமான அலி லாரிஜானி எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “ஈரான் மக்களுக்கு எதிரான முக்கியமான கொலைகாரர்களின் பெயர்களை அறிவிக்கிறோம். 1. டிரம்ப், 2. நெதன்யாகு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.