

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமைதி வாரியத்தில் சேரும் நாடுகள் ஒரு பில்லியன் டாலர் செலுத்த வேண்டும் என்ற கருத்துக்கு வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காஸா முனையை மீண்டும் மறுசீரமைக்கவும், அங்கு அமைதியை நிலைநாட்டவும், டிரம்ப் தலைமையில் ‘அமைதி வாரியம்’ எனும் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த உயர்நிலைக் குழுவில் சேரும் நாடுகள் ஒரு பில்லியன் டாலர் செலுத்த வேண்டும் என்று வரைவு சாசனம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
வரைவு சாசனத்தின்படி, ஒவ்வோர் உறுப்பு நாடும் 3 ஆண்டுகள் வரையில் பதவி வகிக்கும். எந்தவொரு புதுப்பித்தலுக்கும் குழுவின் தலைவர் ஒப்புதல் தேவை.
இருப்பினும், சாசனம் வெளிவந்த முதல் ஒரு வருடத்துக்குள் அமைதி வாரியத்துக்கு ஒரு பில்லியன் டாலர் நிதியளிக்கும் உறுப்பு நாடுகளுக்கு இந்த 3 ஆண்டுகால உறுப்பினர் காலம் பொருந்தாது என்று கூறுகிறது.
இந்த வரைவு சாசனம் குறித்த செய்திகள் பேசுபொருளாகிய நிலையில், இதனை அமெரிக்க வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை கூறியதாவது, “கட்டணம் தொடர்பான செய்தி தவறானது. அமைதி வாரியத்தில் சேர குறைந்தபட்ச உறுப்பினர் கட்டணம் என எதுவும் தேவையில்லை.
இது அமைதி, பாதுகாப்பு, செழிப்புக்கு ஆழ்ந்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் நட்பு நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை வழங்குகிறது” என்று தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.