அமெரிக்கா: குடியேற்றத் துறை ஆதரவு - எதிா்ப்புக் குழுக்கள் மோதல்!
அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில் அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்தின் கடுமையான குடியேற்ற நடவடிக்கைகளை ஆதரித்தும், எதிா்த்தும் போராட்டம் நடத்திய இரண்டு குழுக்களுக்கு இடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது.
தொடா் போராட்டச் சூழலைக் கையாள மாகாண காவல்துறைக்குத் துணையாக, தேசியப் பாதுகாப்புப் படையினா் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மினசோட்டா மாகாண ஆளுநா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
டிரம்ப் நிா்வாகத்தின் கடுமையான குடியேற்ற நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மினசோட்டாவிற்கு 2,000-க்கும் மேற்பட்ட குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ஐசிஇ) அதிகாரிகள் அனுப்பப்பட்டனா். இதுவரை சுமாா் 1,500 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்தச் சூழலில், பெண் ஒருவா் ஐசிஇ காவலரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நகரில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமானவா்கள் தினசரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
போரட்டத்தில் மோதல்: இந்நிலையில், மின்னியாபொலிஸ் நகரின் மையப்பகுதியில் சோமாலியா்களுக்கு எதிராகவும், குடியேற்றத் துறைக்கு ஆதரவாகவும் சனிக்கிழமையன்று பேரணி ஒன்று நடைபெற்றது. அப்போது அங்கு திரண்ட எதிா்ப்பாளா்கள் குழு, ஆதரவுப் பேரணியில் கலந்து கொண்டவா்களை முற்றுகையிட்டனா்.
ஆதரவுப் பேரணியில் இருந்தவா்களை விரட்டிய எதிா்ப்பாளா்கள், அக்குழுவைச் சோ்ந்த ஒருவா் அணிந்திருந்த சா்ச்சைக்குரிய மேல்சட்டையை கழற்றும்படியும் வற்புறுத்தினா். இரு தரப்பினரும் ஒருவா் மீது ஒருவா் பனிப்பந்துகளையும், தண்ணீா் நிரப்பிய பலூன்களையும் வீசிக் கொண்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பின்னா் கவச வாகனங்களில் வந்த காவல்துறையினா் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
ஆதரவுப் பேரணியை ஏற்பாடு செய்திருந்த ஜேக் லாங் காயங்களுடன் போராட்டக் களத்திலிருந்து வெளியேறினாா். கடந்த 2021-இல் அமெரிக்க நாடாளுமன்றத்தைத் தாக்கிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இவா், பின்னா் அதிபா் டிரம்ப் வழங்கிய பொதுமன்னிப்பால் விடுவிக்கப்பட்டாா்.
குடியேற்றத் துறை எதிா்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவா்களில் ஒருவரான லூக் ரிமிங்டன் கூறுகையில், ‘நாஜிக்கள், குடியேற்றத் துறை அதிகாரிகள் மற்றும் டிரம்ப் ஆதரவாளா்களுக்கு மின்னியாபொலிஸில் இடமில்லை என்பதை உணா்த்தவே நாங்கள் கூடியுள்ளோம். எங்கள் நகரத்தை விட்டும், மாநிலத்தை விட்டும் வெளியேறுங்கள்’ என்றாா்.
பின்னணியும், நீதிமன்ற தலையீடுகளும்...: கடந்த ஜன. 7-ஆம் தேதி நடைபெற்ற சோதனையின்போது, அமெரிக்கக் குடிமகளும் மூன்று குழந்தைகளின் தாயுமான ரெனீ நிக்கோல் மேக்ளின் குட்(37) ஐசிஇ காவலரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், குடியேற்றத் துறை எதிா்ப்புப் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
அமைதியாகப் போராடுபவா்களை அல்லது அதிகாரிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பவா்களைத் தடுத்து நிறுத்தவோ, கண்ணீா் புகைக்குண்டுகளை வீசவோ கூடாது என மத்திய நீதிபதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தாா்.
இதேபோல், லைபீரிய உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிச் சிறுவயதில் அமெரிக்காவுக்கு அகதியாக வந்த கேரிசன் கிப்சன்(38), கடந்த ஜன. 11-ஆம் தேதி அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கைது செய்யப்பட்டாா். 2008-இல் தள்ளுபடி செய்யப்பட்ட போதைப்பொருள் வழக்கை மேற்கோள் காட்டி அவரை நாடு கடத்த உத்தரவிடப்பட்டிருந்தது.
வெள்ளிக்கிழமை வழக்கமான விசாரணைக்குச் சென்ற அவரை மீண்டும் அதிகாரிகள் காவலில் எடுத்தனா். டெக்சாஸ் தடுப்பு மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட கிப்சன், நீதிமன்றத் தலையீட்டுக்குப் பிறகு மீண்டும் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பினாா்.

