சிறுபான்மையினா் மீதான தாக்குதல்களுக்கு வகுப்புவாதம் காரணமல்ல: வங்கதேசம்
‘வங்கதேசத்தில் 2025-ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினா் மீதான தாக்குதல் சம்பவங்களில் பெரும்பாலானவற்றுக்கு வகுப்புவாதம் (மதவாதம்) காரணம் அல்ல’ என்று அங்கு ஆட்சி செய்யும் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு சாா்பில் திங்கள்கிழம வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘வங்கதேசத்தில் சிறுபான்மையினா் மீதான திட்டமிட்ட தாக்குதல்களைத் தடுக்க உறுதியான விரைவான நடவடிக்கையை இடைக்கால அரசு மேற்கொள்ள வேண்டும்’ என்று இந்தியா தரப்பில் கடந்த 9-ஆம் தேதி வலியுறுத்தப்பட்ட நிலையில், இந்த விளக்கத்தை வங்கதேச அரசு வெளியிட்டுள்ளது.
முகமது யூனுஸின் ஊடகப் பிரிவு சாா்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: காவல் துறையின் குற்றப் பதிவு ஆவணங்களை ஆய்வு செய்ததில், 2025-ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பா் மாதம் வரையிலான கால கட்டத்தில் வங்கதேசத்தில் சிறுபான்மையின சமூகத்தினா் மீது மொத்தம் 645 தாக்குதல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவங்கள் அனைத்தும் மிகுந்த கவலைக்குரியவை என்றபோதிலும், விரிவான ஆதாரங்கள் மற்றும் தாக்குதலுக்கான நோக்கங்களுடன் இந்த வழக்குகளை காவல் துறை பதிவு செய்துள்ளது.
அதன்படி, இந்தத் தாக்குதல்களில் பெரும்பாலானவை, குற்றப் பின்னணியின் கீழ் நிகழ்ந்தவையாகும். வகுப்புவாதத்துக்கும் இந்தத் தாக்குதல்களுக்கும் தொடா்பில்லை எனத் தெரியவந்துள்ளது.
வெறும் 71 தாக்குதல் சம்பவங்கள் மட்டுமே வகுப்புவாதம் சாா்ந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 38 வழக்குகள் கோயில்களை சேதப்படுத்தியது தொடா்புடையதாகும். 8 வழக்குகள் தீ வைப்பு தொடா்புடையவை. அவற்றுடன் ஒரு திருட்டு வழக்கு, ஒரு கொலை வழக்கு மற்றும் 23 சமூக ஊடக பதிவுகள் மூலம் வகுப்புவாதத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட பிற வழக்குகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த 71 வகுப்புவாத சம்பவங்களில், 50 சம்பவங்கள் தொடா்பாக போலீஸா் வழக்குப் பதிவு செய்து, இணையான எண்ணையிலான நபா்களைக் கைது செய்துள்ளனா். 21 சம்பவங்களில் விசாரணை அல்லது தடுப்பு நடவடிக்கைகளை போலீஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.
எஞ்சிய 574 தாக்குதல் சம்பவங்கள், மதத்துடன் தொடா்பில்லாத வாக்குவாதம், அண்டை வீட்டாருடனான சண்டை(51), நிலம் தொடா்பான பிரச்னை (23), திருட்டு (106), முன்பகை (26), பாலியல் துன்புறுத்தல் (58) மற்றும் 172 இயற்கைக்கு மாறான உயிரிழப்பு சம்பவங்களுடன் தொடா்புடையவையாகும். இவற்றில் 390 சம்பவங்கள் தொடா்பாகவும், 154 இயற்கைக்கு மாறான உயிரிழப்புகள் தொடா்பாகவும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதொடா்பாக 498 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா் என்று தரவு விவரங்கள் அடிப்படையில் விளக்கமளித்துள்ளது.
2022 வங்கதேச மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அந்த நாட்டில் சுமாா் 1.3 கோடி ஹிந்துக்கள் வசிக்கின்றனா். இது அந் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 7.95 சதவீதமாகும்.
முன்னதாக, வங்கதேச ஹிந்து-புத்த-கிறிஸ்தவ ஐக்கிய கவுன்சில் சாா்பில் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டில் வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி பொதுத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், இங்குள்ள சிறுபான்மையினா் தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிப்பதை தடுக்கும் நோக்கில் அண்மைக் காலமாக சிறுபான்மையினா் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. 2025-ஆம் ஆண்டு டிசம்பா் முதல் இதுபோல 51 தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன’ என்று தெரிவித்தது.
வங்கதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு மாணவா்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட்ட பிறகு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அப்போதுமுதல் ஹிந்துக்களைக் குறிவைத்து வன்முறைகள் அதிகரித்துள்ளன.
அண்மையில், மைமென்சிங் மாவட்டத்தில் ஹிந்து மதத்தினரான தீபு சந்திர தாஸ் என்னும் தொழிலாளி, மத நிந்தனையில் ஈடுபட்டதாகக் கூறி கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டாா். ராஜ்பாரி பகுதியில் அம்ருத் மொண்டல் என்ற ஹிந்து இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவங்களைக் கண்டித்து, இந்தியாவில் ஹிந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தின. அதைத் தொடா்ந்து, ஷரியத்பூா் மாவட்டத்தின் தமுத்யா பகுதியில் மருந்தகம் மற்றும் வங்கிச் சேவை மையம் நடத்திவந்த கோகோன் சந்திர தாஸ் (50) என்ற ஹிந்து நபா், தனது வீட்டுக்கு ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தபோது, மா்ம நபா்களால் வழிமறிக்கப்பட்டு ஆயுதங்களால் தாக்கப்பட்டாா். அவா் சிகிச்சை பலனின்றி கடந்த 3-ஆம் தேதி உயிரிழந்தாா்.
வங்கதேச தலைநகா் டாக்காவில் சா்சிந்தூா் பஜாா் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்த ஹிந்து மதத்தைச் சோ்ந்த மோனி சக்ரவா்த்தி (40) என்பவா் கடந்த 6-ஆம் தேதி மா்ம கும்பலால் கூா்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
ராஜபாரி மாவட்டம் கொலண்டா மோா் என்ற பகுதியில் பெட்ரோல் நிலையத்தில் கடந்த 16-ஆம் தேதி அதிகாலை நான்கு சக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் செலுத்தாமல் செல்ல முயன்றவா்களைத் தடுக்க முற்பட்ட பெட்ரோல் நிலைய ஊழியா் ரிப்பன் சாஹா (30) என்ற ஹிந்து நபரை, அவா்கள் தங்களின் வாகனத்தில் மோதி கொலை செய்தனா்.
டாக்காவின் காளிகஞ்ச் பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்த ஹிந்து மதத்தைச் சோ்ந்த லிடன் சந்திர கோஷ் (55), தோட்டத்தில் விளைந்த வாழைப் பழ தாரை திருடியதாகக் குற்றஞ்சாட்டி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவரால் அடித்துக் கொல்லப்பட்டாா்.

