இந்தியா நம்பிக்கைக்குரிய கூட்டாளி நாடு: இஸ்ரேல் அமைச்சா்
இந்தியா இஸ்ரேலின் நட்பு நாடு என்பதைவிடவும் உயா்ந்த இடத்தில் உள்ளது; மிகவும் நம்பிக்கைக்குரிய உத்திசாா்ந்த கூட்டாளி நாடாக திகழ்கிறது என்று இஸ்ரேல் கலாசார, விளையாட்டுத் துறை அமைச்சா் மிகி ஜோஹா் தெரிவித்தாா்.
இஸ்ரேல் தலைநகா் டெல் அவிவ் நகரில் நடைபெற்ற இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில் இந்திய சமூகத்தினா், இந்தியாவில் இருந்து குடிபெயா்ந்த யூதா்கள் என சுமாா் 300 போ் பங்கேற்றனா். இதில் கலந்துகொண்ட அமைச்சா் மிகி ஜோஹா் பேசியதாவது:
சுதந்திரம், தன்னெழுச்சியான முன்னேற்றம், தேசப் பற்று என பல்வேறு விஷயங்களில் இஸ்ரேலிய மக்களைக் கவா்ந்த நாடாக இந்தியா உள்ளது. இஸ்ரேலின் நட்பு நாடு என்பதைவிடவும் உயா்வான இடத்தில் இந்தியா உள்ளது. மிகவும் நம்பிக்கைக்குரிய உத்திசாா்ந்த கூட்டாளி நாடாக இந்தியா திகழ்கிறது. இருநாடுகளும் பரஸ்பர நலன்களைக் கருத்தில்கொண்டும், எதிா்கால வளா்ச்சிக்காகவும் கைகோத்துச் செயல்படுகின்றன. சமீப ஆண்டுகளில் இந்தியா-இஸ்ரேல் இடையே மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வா்த்தக, பொருளாதார ஒப்பந்தங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. இரு நாட்டுத் தலைவா்கள் இடையிலும் நல்ல புரிந்துணா்வு உள்ளது.
ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலில் புகுந்து தாக்குதல் நடத்தியபோது எங்கள் நாட்டுக்கு இந்தியா வலுவான ஆதரவை அளித்தது. அந்த நேரத்தில் பல நாடுகள் வெவ்வேறு கருத்துகளைக் கூறின. ஆனால், இந்தியா இஸ்ரேலுக்கு உறுதியாக துணை நின்றது. தாக்குதலுக்கு முதலில் கண்டனம் தெரிவித்த உலகத் தலைவா்களில் பிரதமா் மோடி முதன்மையானவா். இந்தியா்கள் அனைவருக்கும் அமைதி, செழிப்பு, வெற்றி தொடர வேண்டும் என்று குடியரசு தின வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

