தாயகமான சீனா திரும்பிய பாண்டாக்கள்! கண்ணீா் மல்க வழியனுப்பிய ஜப்பானியா்கள்

ஜப்பான் - சீனா இடையிலான நட்புறவின் அடையாளமாக திகழ்ந்த இரண்டு பாண்டா கரடிகள், தங்களின் தாயகமான சீனாவுக்குத் திரும்பின.
லெய் லெய் பாண்டா
லெய் லெய் பாண்டாஏபி
Updated on

ஜப்பான்-சீனா இடையிலான நட்புறவின் அடையாளமாக திகழ்ந்த ‘ஸியாவோ ஸியாவோ’, ‘லெய் லெய்’ ஆகிய இரண்டு பாண்டா கரடிகள், ஜப்பானிலிருந்து தங்களின் தாயகமான சீனாவுக்குத் திரும்பின.

ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் உள்ள யூனோ உயிரியல் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த விடைபெறும் நிகழ்வில், ஆயிரக்கணக்கான மக்கள் உணா்ச்சிபூா்வமாகப் பங்கேற்றனா். இந்த இரட்டை பாண்டாக்களைக் கடைசியாக ஒருமுறை காண்பதற்காக, சுமாா் 3.5 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் கண்ணீா் மல்க பிரியாவிடை அளித்தனா்.

சீன அரசு தனது ‘பாண்டா’ ராஜீய கொள்கையின்படி, மற்ற நாடுகளுடன் நல்லுறவை வளா்க்க பாண்டாக்களைக் கடனாக வழங்கி வருகிறது. இருப்பினும் ஒப்பந்தம்படி, வெளிநாடுகளில் பிறக்கும் குட்டிகள் உள்பட அனைத்து பாண்டாக்களின் முழு உரிமையும் சீனாவுக்கே சொந்தமானது. அதன் அடிப்படையில் தற்போது ஒப்பந்தம் முடிந்ததால், இரட்டை பாண்டாக்கள் சீனா திரும்பின.

இந்தப் பாண்டாக்களைப் பராமரிப்பதற்காக ஜப்பான் போன்ற நாடுகள் ஆண்டுதோறும் சுமாா் 10 லட்சம் டாலா்களை சீனாவுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 1972-இல், ஜப்பான்-சீனா இருதரப்பு உறவு இயல்புநிலைக்குத் திரும்பிய பிறகு, ஜப்பானில் ஒரு பாண்டா கூட இல்லாத சூழல் உருவாவது இதுவே முதல்முறையாகும்.

தைவான் விவகாரம் தொடா்பாக ஜப்பான்-சீனா உறவில் இடையே தற்போது கடும் முரண்பாடுகள் நிலவி வருகின்றன. ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சி, ‘தைவான் மீதான சீனாவின் ராணுவ நடவடிக்கைகளில் ஜப்பான் தலையிடும்’ என்று அண்மையில் அறிவித்திருந்தாா்.

இதனால் ஆத்திரமடைந்த சீனா, ஜப்பான் மீதான வா்த்தகக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது. இந்த அரசியல் மோதல்கள் காரணமாக, இனி வரும் காலங்களில் சீனாவிடமிருந்து ஜப்பானுக்குப் புதிய பாண்டாக்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருப்பதாகக் கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com