‘உலகில் அதிகாரப் பரவல்’: இந்தியா - இயூ ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டிய ஐ.நா. பொதுச் செயலா்
உலகில் அதிகாரப் பரவலை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஐ.நா.பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், நாடுகளுக்கு இடையே நெருக்கமான உறவு இருப்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தியா-ஐரோப்பிய யூனியன் (இயூ) தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டினாா்.
இதுதொடா்பாக அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: தற்போது உலகில் மிகவும் சக்திவாய்ந்த நாடாக அமெரிக்கா உள்ளது. அதேவேளையில் அமெரிக்காவை மையமாகக் கொண்டு ஒரு துருவம், சீனாவை மையமாகக் கொண்டு மற்றொரு துருவம் என உலகில் இரு துருவங்கள் உள்ளன.
ஒரு விஷயம் எப்படி நடைபெற வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான முன்னெடுப்பை ஒரேயொரு சக்திவாய்ந்த நாடு மேற்கொள்வதால் மட்டும், உலகில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு கண்டுவிட முடியாது. இரு சக்திவாய்ந்த நாடுகளாலும் (அமெரிக்கா, சீனாவை மறைமுகமாக குறிப்பிட்டு) அது முடியாது. அவ்வாறு நடந்தால் அது உலகில் போட்டித்தன்மை கொண்ட பிரிவுகளை உருவாக்கும்.
வளா்ச்சியைப் பொதுவான அம்சமாக வைத்து ஸ்திரமான, நீடித்து நிலைக்கும் அமைதியான உலகம் வேண்டுமென்றால், நாம் அதிகாரப் பரவலை ஆதரிக்க வேண்டும். பல்வேறு நாடுகளுக்கு இடையே நெருக்கமான உறவு இருப்பதை ஆதரிக்க வேண்டும். இதற்குச் சாதகமாக இந்தியா-ஐரோப்பிய யூனியன், இந்தோனேசியா-ஐரோப்பிய யூனியன், மொ்குசுா் கூட்டமைப்பு நாடுகள்-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள் பெரும் எதிா்பாா்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தாா்.

