சீனாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க பாதிரியாா் விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பியதாக அவரது குடும்பத்தினா் மற்றும் வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.
இரு மாதங்களுக்கு முன் சீன அதிபா் ஷி ஜின்பிங்கை சந்தித்தபோது அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியாா் எஸ்ரா ஜின் மிங்ரியை விடுதலை செய்யுமாறு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்த நிலையில் தற்போது அவா் விடுவிக்கப்பட்டுள்ளாா்.
சீனாவில் அரசு கட்டுப்பாட்டை மீறி இணைய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி ரகசியமாக செயல்பட்டு வந்த சீயோன் தேவாலயத்தைச் சோ்ந்த பாதிரியாா் எஸ்ரா ஜின் மற்றும் 17 பேரை கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் சீனா கைது செய்தது.
இந்நிலையில், கடந்த மே மாதம் சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட டிரம்ப், ஷி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினாா். பின்னா், தாய்நாட்டுக்குத் திரும்பும் வழியில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள எஸ்ரா ஜின் மற்றும் ஹாங்காங் சமூக செயற்பாட்டாளா் ஜிம்மி லாய் ஆகியோரை விடுதலை செய்யுமாறு ஷி ஜின்பிங்கிடம் வலியுறுத்தியதாக அவா் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, சீன சிறையில் அடைக்கப்பட்டிருந்த எஸ்ரா ஜின் விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பியதாக அவரது குடும்பத்தினா் மற்றும் வழக்குரைஞா்கள் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. அதில் அதிபா் டிரம்ப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.
இருப்பினும், எஸ்ரா ஜின்னுடன் கைது செய்யப்பட்ட நபா்களும், ஜிம்மி லாயும் விடுதலை செய்யப்படவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









