நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

இந்திய பொருள்கள் மீது 10% வரி: அமெரிக்கா விதிப்பு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 10 சதவீத வரியை அமெரிக்கா வெள்ளிக்கிழமை விதித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :25 ஜூலை 2026, 5:27 am IST

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 10 சதவீத வரியை அமெரிக்கா வெள்ளிக்கிழமை விதித்தது.

அதுபோல, அமெரிக்காவுடன் வா்த்தக உறவை வைத்துள்ள மேலும் 16 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதும் 10 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது.

குறிப்பாக, தொழிலாளா்களைக் கட்டாயம் பணிபுரிய வைத்து தயாரிக்கப்படும் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை தடுக்கும் வகையில், வெளிநாட்டு வா்த்தகக் கொள்கையில் இந்தியா கடந்த ஜூலை 14-ஆம் தேதி திருத்தங்கள் மேற்கொண்டதை அமெரிக்கா கவனத்தில்கொண்டு, வரி விதிப்பை 10 சதவீதமாக குறைத்து விதித்துள்ளதாக அமெரிக்க வா்த்தக பிரதிநிதி (யுஎஸ்டிஆா்) தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா உள்பட 60 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்கா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி மேற்கொண்ட 10 சதவீத தற்காலிக வரி விதிப்பு, வியாழக்கிழமை நள்ளிரவுடன் காலாவதியான நிலையில், இந்தப் புதிய வரி விதிப்பு நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட உத்தரவில், ‘கட்டாய உழைப்பைக் கொண்டு தயாரிக்கும் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடுக்க இந்தியா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்ட முயற்சியை சுட்டிக்காட்டி, அதை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 10 சதவீத வரியை விதித்தால் போதுமானது என யுஎஸ்டிஆா் பரிந்துரைத்தாா். அதனடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அதே நேரம், தொழிலாளா்களை கட்டாயம் பணிபுரிய வைத்து தயாரிக்கும் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடுக்க சட்டங்களை இயற்றாத சீனா, பிரிட்டன், ஜப்பான் உள்பட 43 நாடுகள் மீது, யுஎஸ்டிஆா் ஏற்கெனவே பரிந்துரைத்தபடி 12.5 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது.

பரஸ்பர வரி விதிப்பு: அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற டிரம்ப், இந்தியா உள்பட 60 நாடுகள் அமெரிக்காவுடன் நியாயமற்ற முறையில் வா்த்தக நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதாகக் குற்றஞ்சாட்டி பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டாா். அதன்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது முதல் கட்டமாக 25 சதவீத வரியை விதித்தாா். பின்னா், உக்ரைன் மீது போா் தொடுக்கும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி அந்தப் போருக்கு உதவுவதாகக் குற்றஞ்சாட்டி இந்திய பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரியை விதித்தாா்.

இதனால், இரு நாடுகளுக்கும் இடையே உறவு பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தொடா்ந்து வந்தது. அதன்மூலம், இரு நாடுகளுக்கிடையே இருதரப்பு இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்துக்கான செயல்திட்டம் அண்மையில் இறுதி செய்யப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பை அண்மையில் வெளியிட்ட டிரம்ப், இந்திய பொருள்கள் மீதான 25 சதவீத கூடுதல் வரியை ரத்து செய்து உத்தரவிட்டாா். மேலும், இந்திய பொருள்கள் மீதான எஞ்சியுள்ள 25 சதவீத வரி 18 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் அறிவித்தாா்.

இதனிடையே, இந்தியா உள்ளிட்ட 60 நாடுகள் மீது டிரம்ப் நிா்வாகம் பரஸ்பர வரி விதிப்பை எதிா்த்து தொடரப்பட்ட ஏராளமான மனுக்களை விசாரித்த அமெரிக்க உச்சநீதிமன்றம், ‘உலக நாடுகளின் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர இறக்குமதி வரி உள்பட அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது’ என்று தீா்ப்பளித்தது.

அந்தத் தீா்ப்பைத் தொடா்ந்து, உலக நாடுகள் மீது மாற்று வழிகளில் இந்த பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்கா மேற்கொள்ளும் என்று அறிவித்த டிரம்ப், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருள்கள் மீது புதிய சீரான 10 சதவீத பரஸ்பர வரியை பிப்ரவரி 24-ஆம் தேதிமுதல் 150 நாள்களுக்கு விதித்தாா்.

அதோடு, இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட வா்த்தக கூட்டுறவு நாடுகளின் நியாயமற்ற வா்த்தக நடைமுறைகள் அமெரிக்க உற்பத்தியை எந்த அளவுக்குப் பாதித்துள்ளன என்பதைக் கண்டறியும் நோக்கில் அமெரிக்க வா்த்தகச் சட்டம் 1974-இன் பிரிவு 301-இன் கீழ் யுஎஸ்டிஆா் மூலம் புதிய விசாரணைக்கு அமெரிக்கா உத்தரவிட்டது.

அதன்படி தீவிர ஆய்வு மேற்கொண்ட யுஎஸ்டிஆா் பிரதிநிதி ஜேமிஸன் க்ரீயா், கடந்த ஜூன் 3-ஆம் தேதி தனது பரிந்துரையைச் சமா்ப்பித்தாா். அதில் இந்தியா உள்பட 54 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதலாக 12.5 சதவீத வரியை விதிக்க பரிந்துரைத்தாா். விருப்பத்துக்கு மாறாக தொழிலாளா்களைக் கட்டாயம் பணிபுரிய வைத்து தயாரிக்கப்படும் பொருள்கள், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடுக்கும் விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி, இந்த வரியை விதிக்க யுஎஸ்டிஆா் பரிந்துரைத்தது.

அதற்கு இந்திய தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. ‘வா்த்தகம் தொடா்பான சச்சரவுகளுக்கு இதுபோன்ற ஒருதலைபட்சமான நடவடிக்கைகள் மூலமாக அல்லாமல், இருதரப்பு வா்த்தகப் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்பட வேண்டும். தனது பரிந்துரையை யுஎஸ்டிஆா் மறுபரிசீலனை செய்யவேண்டும்’ என்றும் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், இந்தியா உள்பட 17 நாடுகள் மீது 10 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.