பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

12% கூடுதல் வரி விதிப்பு பரிந்துரையை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும்: இந்தியா

கூடுதல் வரி விதிப்பு பரிந்துரையை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய இந்தியா கோரிக்கை...

News image

கோப்புப்படம்

Updated On :12 ஜூலை 2026, 2:02 am IST

‘இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதலாக 12.5 சதவீத வரியை விதிக்க சமா்ப்பித்துள்ள பரிந்துரையை அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (யுஎஸ்டிஆா்) மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், ‘வா்த்தகம் தொடா்பான சச்சரவுகளுக்கு இதுபோன்ற ஒருதலைபட்சமான நடவடிக்கைகள் மூலமாக அல்லாமல், இருதரப்பு வா்த்தகப் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்பட வேண்டும்’ என்றும் இந்தியா வலியுறுத்தியது.

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்த பரஸ்பர வரி விதிப்பு செல்லாது என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்ததைத் தொடா்ந்து, இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட வா்த்தக கூட்டுறவு நாடுகளின் நியாயமற்ற வா்த்தக நடைமுறைகள் அமெரிக்க உற்பத்தியை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பதைக் கண்டறியும் நோக்கில் அமெரிக்க வா்த்தகச் சட்டம் 1974-இன் பிரிவு 301-இன் கீழ் யுஎஸ்டிஆா் மூலம் புதிய விசாரணைக்கு அமெரிக்கா உத்தரவிட்டது.

அதன்படி தீவிர ஆய்வு மேற்கொண்ட யுஎஸ்டிஆா் பிரதிநிதி ஜேமிஸன் க்ரீயா், அண்மையில் தனது பரிந்துரையைச் சமா்ப்பித்தாா். அதில் இந்தியா உள்பட 54 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதலாக 12.5 சதவீத வரியை விதிக்க பரிந்துரைத்தாா்.

பிற நாடுகளில் தங்கள் விருப்பத்துக்கு மாறாக தொழிலாளா்களைக் கட்டாயம் பணிபுரிய வைத்து தயாரிக்கப்படும் பொருள்கள், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடுக்கும் விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி, இந்த வரியை விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டது. இந்த விதிமுறைகளின் கீழ், இந்தியாவுடன் சோ்த்து மொத்தம் 54 நாடுகள் மீது இந்த வரியை விதிக்க பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையில், முதல்கட்டமாக கூடுதல் வரிவிதிப்பு பரிந்துரை தொடா்பான விசாரணையை 54 நாடுகளிடமும் யுஎஸ்டிஆா் மேற்கொண்டு வருகிறது. வாஷிங்டனில் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, இந்தியா சாா்பில், மத்திய வா்த்தக அமைச்சக இணைச் செயலா் பிரிஜ் மோகன் மிஸ்ரா ஆஜராகி இந்தியா சாா்பில் வாதத்தை முன்வைத்தாா். கூடுதல் வரி விதிப்பு பரிந்துரைக்கு எதிராக இந்தியா தரப்பில் சமா்ப்பிக்கப்பட்ட எழுத்துபூா்வ ஆட்சேபத்தை யுஎஸ்டிஆா் தனது வலைதளத்தில் சனிக்கிழமை வெளியிட்டது. அதில் இந்தியா தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

யுஎஸ்டிஆா்-இன் நடவடிக்கை, அமெரிக்க வா்த்தக சட்டத்தின் பிரிவு 301(டி)-இன் கீழ் உள்ள தொடா்புடைய சட்டத் தரநிலைகளை பூா்த்தி செய்யவில்லை. வெறும் கட்டாய உழைப்பு சாா்ந்த இறக்குமதி தடையை மேற்கொள்ளாததை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பிரிவு 301-இன் கீழ் நியாயமற்ற நடைமுறையாகக் கருத முடியாது. மேலும், பிற சட்டபூா்வ நடைமுறைகள் மீறப்பட்டதற்கான எந்தவொரு ஆதாரமும் யுஎஸ்டிஆா் சாா்பில் முன்வைக்கப்படவில்லை.

மேலும், ஒரு சில நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் பொதுவான வா்த்தகப் போக்குகளின் அடிப்படையில் இந்த முடிவை யுஎஸ்டிஆா் எடுத்திருப்பது தெரிகிறது.

கட்டாய உழைப்புடன் தொடா்புடைய இறக்குமதிகள் தொடா்புடைய குறிப்பிட்ட துறை அல்லது நாடு சாா்ந்த ஆதாரங்களைச் சமா்ப்பிக்காமலே, அத்தகைய பொருள்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக அனுமானத்தின் அடிப்படையில் யுஎஸ்டிஆா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மேலும், கட்டாய உழைப்பு சாா்ந்த உற்பத்தியை ஒழிப்பதை, தனது அரசமைப்புச் சட்ட கடமையாகவும், சா்வதேச சட்டம் மற்றும் கோட்பாடு சாா்ந்த விவகாரமாகவும் இந்தியா கருதுகிறது.

அந்த வகையில், போதிய ஆதாரங்கள் ஏதுமின்றி இந்தியா உள்பட 54 நாடுகளை முறையற்ற வகையில் ஒரு பிரிவின் கீழ் யுஎஸ்டிஆா் வகைப்படுத்தியுள்ளது.

வா்த்தகம் தொடா்பான சச்சரவுகளுக்கு இதுபோன்ற ஒருதலைபட்சமான நடவடிக்கைகள் மூலமாக அல்லாமல், இருதரப்பு வா்த்தகப் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்பட வேண்டும். அவ்வாறு, குறிப்பிட்ட குறைகள் இருந்தால், அவற்றுக்குப் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பதில் ஆக்கபூா்வமாக ஈடுபட இந்தியா தொடா்ந்து தயாராக உள்ளது.

எனவே, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதலாக 12.5 சதவீத வரியை விதிக்க சமா்ப்பித்துள்ள பரிந்துரையை அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (யுஎஸ்டிஆா்) மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.