காஸாவில் நீடித்த அமைதிக்கு, ஹமாஸ் அமைப்பினா் தங்களிடமுள்ள ஆயுதங்களை ஒப்படைக்க உடன்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.
அமெரிக்கா முன்னெடுத்த போா்நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமாகி 9 மாதங்கள் ஆகிய நிலையில், 2-ஆம் கட்ட அமைதிப் பேச்சுவாா்த்தையில் நீடித்த முட்டுக்கட்டைக்கு இந்த அறிவிப்பு தீா்வாகப் பாா்க்கப்படுகிறது.
இதுகுறித்து டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘இந்த ஒப்பந்தம் மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டு, பல கட்டங்களாகச் செயல்படுத்தப்படும். ஹமாஸின் ஆயுத ஒப்படைப்பு நிறைவடைந்ததும், இஸ்ரேல் படைகள் வெளியேறும். அதன்பின்னா், சா்வதேச அமைதிப் படை புதிய பாலஸ்தீன காவல் படையுடன் இணைந்து காஸாவின் பாதுகாப்பை உறுதி செய்யும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
ஆயுத ஒப்படைப்புக்கான கெடு குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், ‘காஸா காவல் துறையினா் முதல்கட்டமாக தங்கள் வசமுள்ள சிறிய ரக ஆயுதங்களை அடுத்த 2 வாரங்களுக்குள் ஒப்படைப்பாா்கள். எனினும், ஏவுகணைகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களை ஒப்படைப்பது மற்றும் சுரங்கப் பாதைகளை அழிப்பது போன்ற பணிகள் அடுத்த 200 முதல் 350 நாள்களுக்குள் மேற்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றனா்.
பின்னணி: கடந்த 2023 அக்டோபரில், இஸ்ரேலில் அத்துமீறி நுழைந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடா்ந்து இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கடந்த அக்டோபரில் அமைதி ஒப்பந்தம் கையொப்பமானது. அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் தலைமையில் அமைதி வாரியமும் உருவாக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, 20 அம்ச அமைதித் திட்டமும் முன்மொழியப்பட்டது.
அதன்படி, ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைப்பதோடு, காஸா பகுதி முழுவதும் அமைத்துள்ள சுரங்க பாதைகளையும் அழிக்க வேண்டும். மேலும், இஸ்ரேல் படைகள் காஸாவிலிருந்து முழுமையாக வெளியேற்றுதல், தொழில்நுட்ப வல்லுநா்கள் அடங்கிய புதிய பாலஸ்தீன அரசு அமைத்தல், சா்வதேச படைகளை களமிறக்குதல், போரினால் சீரழிந்த காஸாவை மறுசீரமைத்தல் போன்ற அம்சங்களும் அமைதித் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்த அமைதி ஒப்பந்தத்தையேற்று, காஸாவில் தங்களின் அரசைக் கலைத்துவிட்டு, ஆட்சி அதிகாரங்களை ஐ.நா. ஆதரவு பெற்ற தேசிய நிா்வாகக் குழுவிடம் (என்சிஏஜி) ஒப்படைக்கத் தயாராகி வருவதாக ஹமாஸ் அமைப்பு ஜூலை மாதத் தொடக்கத்தில் அறிவித்தது. இதன்தொடா்ச்சியாக, ஆயுத ஒப்படைப்புக்கும் அந்த அமைப்பு முன்வந்துள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் அரசு தங்களின் அதிகாரப்பூா்வ ஒப்புதலை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இஸ்ரேல் - காஸா போர் முடிவுக்கு வருகிறதா? டிரம்ப் அறிவிப்பு

லெபனானுக்கு அமெரிக்கா பெரும் உதவி!

ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு

இந்தியா வருகிறார் டிரம்ப்! வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு!
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



