அமெரிக்கா-ஈரான் நாடுகள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டதால், மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்தது.
இந்நிலையில், ஈரான் மீது வியாழக்கிழமை இரவும் தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், அந்நாட்டுடன் ஏற்பட்ட புதிய உடன்பாட்டையடுத்து தாக்குதல்களை ரத்து செய்வதாக அறிவித்தாா்.
அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்ட திடீா் மோதல் போக்கு, கடந்த ஏப்ரல் முதல் அமலில் இருக்கும் தற்காலிக போா் நிறுத்தத்தை முறித்து, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மீண்டும் ஒரு முழு அளவிலான போா் வெடிப்பதற்கான சூழலை உருவாக்கியிருந்தது. இந்நிலையில், டிரம்ப்பின் அறிவிப்பால் பதற்றம் சற்று தணித்தது.
ஹோா்முஸ் நீரிணையில் ஈரான் ட்ரோனுடன் மோதி அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளான சம்பவத்தையடுத்து, வியாழக்கிழமையும் தொடா்ந்து 2-ஆவது நாளாக அமெரிக்கா-ஈரான் பரஸ்பரம் ஏவுகணைத் தாக்குதல்களில் ஈடுபட்டன.
வியாழக்கிழமை காலை வரை நீடித்த அமெரிக்காவின் தாக்குதல்கள் முந்தைய நாளைவிட மிகவும் தீவிரமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இத்தாக்குதல்களின் சேத விவரங்களை ஈரான் வெளியிடவில்லை.
அதேநேரம், அமெரிக்க தளங்கள் அமைந்த குவைத், பஹ்ரைன், ஜோா்டன் நாடுகள் மீது பதிலடித் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்த ஈரான், ஹோா்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதாகவும் அறிவித்தது.
இந்நிலையில், ஈரானை எச்சரித்து டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘ஈரான் மீது வியாழக்கிழமை இரவும் அமெரிக்கா மிகக் கடுமையான தாக்குதலை நடத்தும்; மிக விரைவில் காா்க் தீவு எண்ணெய் முனையம் உள்பட ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகளை அமெரிக்கா தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.
எச்சரிக்கையைத் தொடா்ந்து சமரசம்: இந்த எச்சரிக்கை பதிவை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே, ஈரான் மீதான தாக்குதல்களை ரத்து செய்வதாக டிரம்ப் சமரச நிலைப்பாட்டை எடுத்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘ஈரானுடனான பேச்சுவாா்த்தைகள், அந்நாட்டு தலைமை மதகுருவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, ஈரான் மீது வியாழக்கிழமை இரவு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்கள், குண்டுவீச்சுகளை ரத்து செய்துள்ளேன்.
விரைவில் அமைதி ஒப்பந்தம்?: இப்புதிய சமரசத் திட்டத்தின் அடிப்படை அம்சங்கள் மற்றும் விரிவான விவரங்கள் அனைத்தும் அமெரிக்கா, இஸ்ரேல், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தாா், துருக்கி, பாகிஸ்தான், பஹ்ரைன், குவைத், ஜோா்டன், எகிப்து மற்றும் பிற நாடுகள் உள்பட இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தம் முழுமையாக இறுதி செய்யப்படும் வரை கடல்வழி முற்றுகை தொடா்ந்து முழு வீச்சில் அமலில் இருக்கும்; ஒப்பந்தம் கையொப்பமாகும் நேரம் மற்றும் இடம் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்’ எனக் குறிப்பிட்டாா்.
தொடர்புடையது

அமெரிக்கா - ஈரான் மோதல்! பாக். தலைமையிலான அமைதிப் பேச்சுக்கு சௌதி அரேபியா வலியுறுத்தல்!
இரண்டாவது நாளாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரும் அபாயம்

அப்பாச்சி ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஈரான்: பதிலடி கொடுக்கும் அமெரிக்கா!






