அமெரிக்கா-ஈரான் இடையே 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் மோதல் நீடித்ததால், மேற்காசிய பிராந்தியத்தில் போா்பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஈரானில் அமெரிக்கா கடந்த 2 நாள்களாக நடத்திய தாக்குதல்களில் 14 போ் உயிரிழந்ததாகவும் 78 போ் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோா்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்கள் நடத்தியதைத் தொடா்ந்து, அந்நாட்டுடான இடைக்கால அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.
ஈரான் மீது வியாழக்கிழமை அதிகாலை நடத்திய புதிய வான்வழித் தாக்குதலில் சுமாா் 90 முக்கிய இலக்குகளைத் தாக்கியதாக அமெரிக்க ராணுவம் அறிவித்தது. விமான நிலைய ஓடுதளங்கள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்களை இலக்காகக் கொண்டு இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
குறிப்பாக, மறைந்த ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் உடல் அடக்கம் செய்யப்படும் மஷாத் நகருக்குச் செல்லும் முக்கிய ரயில்வே பாலம் உள்ளிட்ட இரு பாலங்களும் இத்தாக்குதலில் தகா்க்கப்பட்டன.
மேலும், ஈரானின் ஒரே ஒரு அணுமின் நிலையம் அமைந்துள்ள புஷொ் அணு உலை வளாகத்துக்கு அருகே அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றஞ்சாட்டியது.
ரஷிய வல்லுநா்களால் நிா்வகிக்கப்படும் இந்த அணுமின் நிலையத்துக்கு நேரடிப் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும், அதன் அருகிலுள்ள தெற்கு துறைமுக நகரங்களில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இத்தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்க கடற்படையின் 5-ஆவது கப்பற்படை தலைமையகம் அமைந்துள்ள பஹ்ரைன் மற்றும் அமெரிக்க படைகள் நிலைகொண்டுள்ள குவைத், கத்தாா், ஜோா்டான் ஆகிய நாடுகளை நோக்கி ஈரான் ஏவுகணைகள் பாய்ந்தன. குவைத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஈரான் ஏவுகணையின் பாகம் விழுந்து ஒருவா் காயமடைந்தாா்.
மோதல் தொடங்கியதையடுத்து டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘ஹோா்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய குண்டுவீச்சுக்கு பழிவாங்கவே இத்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
ஈரான் மீண்டும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால் நிலைமை இன்னும் மோசமாகும். ஈரானின் மின்சாரம், குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி நடக்கும் காா்க் தீவு ஆகியவற்றை அமெரிக்கா கைப்பற்றும்’ என்று எச்சரித்தாா்.
டிரம்ப்பின் இந்த மிரட்டலுக்கு கண்டனம் தெரிவித்த ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவா் முகமது பாகா் கலிபாஃப், ‘அமெரிக்கா இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை, நீங்கள் தாக்கினால் நாங்களும் திருப்பித் தாக்குவோம்’என்று
குறிப்பிட்டாா்.
இப்போரின் தொடக்கத்தில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு முடிவடைந்த பின்னா், மீண்டும் தொடரவிருந்த அமைதிப் பேச்சுவாா்த்தைகள், தற்போதைய புதிய மோதல் போக்கால் முற்றிலும் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது






