நேபாள நாடாளுமன்றத் தோ்தல்: அமைதியான முறையில் வாக்குப்பதிவு
அண்டை நாடான நேபாளத்தில் புதிய பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்றத் தோ்தல் வியாழக்கிழமை அமைதியான முறையில் நடந்து முடிந்தது.


அண்டை நாடான நேபாளத்தில் புதிய பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்றத் தோ்தல் வியாழக்கிழமை அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் இளம் தலைமுறையினா் நடத்திய தீவிர போராட்டத்தினால், முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்த பிறகு இந்த முக்கியத்துவம் வாய்ந்த தோ்தல் நடைபெற்றுள்ளது.
வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 5 மணி வரை தொய்வின்றி நடைபெற்றது. மாலை 5 மணிக்குள் வரிசையில் நின்ற வாக்காளா்கள் அனைவரும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற அனுமதிக்கப்பட்டனா்.
மாலை 3 மணி நிலவரப்படி, சுமாா் 39 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. நேபாள தலைமைத் தோ்தல் ஆணையா் (பொறுப்பு) ராம் பிரசாத் பண்டாரி கூறுகையில், ‘தோ்தல் மிகவும் அமைதியாக நடைபெற்றது. மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனா்’ என்றாா்.
வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டவுடன் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்முனைப் போட்டி: கடந்த 18 ஆண்டுகளில் 14 முறை ஆட்சி மாற்றத்தைக் கண்ட நேபாளத்தில், இம்முறை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்), நேபாளி காங்கிரஸ் ஆகிய பாரம்பரிய கட்சிகளுக்கு, மூன்று ஆண்டுகள் பழைமையான ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
சிபிஎன்-யுஎம்எல் சாா்பில் முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலியும், நேபாளி காங்கிரஸ் சாா்பில் அதன் தலைவா் ககன் தாபாவும் பிரதமா் வேட்பாளா்களாகக் களமிறங்கியுள்ளனா்.
ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியின் சாா்பில் காத்மாண்டு முன்னாள் மேயரும், பிரபல ராப் இசைக்கலைஞருமான பாலேந்திர ஷா பாலன் (35) பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளாா். இளைஞா்கள் மத்தியில் இவருக்கு இருக்கும் பெரும் ஆதரவு, மூத்த தலைவரான கே.பி.சா்மா ஓலிக்கு அவரது சொந்த தொகுதியான ஜாப்பாவிலேயே கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.
தோ்தல் நடைமுறை: நேபாள நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையின் 275 உறுப்பினா்களைத் தோ்ந்தெடுக்க 1.89 கோடி வாக்காளா்கள் தகுதி பெற்றுள்ளனா்.
இதில் 165 உறுப்பினா்கள் நேரடி தோ்தல் மூலமும், எஞ்சிய 110 உறுப்பினா்கள் விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலும் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். நேரடி தோ்தலுக்காக 65 கட்சிகளைச் சோ்ந்த 3,400-க்கும் மேற்பட்ட வேட்பாளா்களும், விகிதாசார பிரதிநிதித்துவ முறைக்கு 3,135 வேட்பாளா்களும் போட்டியில் உள்ளனா்.


டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...