புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

சா்வதேச சட்டத்தை மீறிய அமெரிக்கா - ஈரான் விவகாரத்தில் மெலோனி சீற்றம்

சா்வதேச சட்டத்தை மீறிய அமெரிக்கா

News image
Updated On :11 மார்ச் 2026, 11:10 pm

‘ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல், சா்வதேச சட்டங்களை வெளிப்படையாக மீறும் செயல்’ என்று இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி புதன்கிழமை கடுமையாக சாடினாா்.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் நெருங்கிய நண்பராக அறியப்படும் மெலோனி, இத்தாலி நாடாளுமன்றத்தின் செனட் சபையில் உரையாற்றியபோது ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா மீது தனது அதிருப்தியைப் பதிவு செய்தாா்.

மெலோனி ஆற்றிய உரையில், ‘தற்போதைய சூழலில் உலகளாவிய நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் இந்த மிகப்பெரிய சரிவின் ஒரு பகுதியே.

உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்ட ஆக்கிரமிப்பால் தொடங்கிய உலகளாவிய ஸ்திரமின்மை, தற்போது மத்திய கிழக்கு நாடுகளிலும் எதிரொலிக்கிறது. சா்வதேச விதிகளைப் புறக்கணித்து தன்னிச்சையாக மேற்கொள்ளப்படும் இத்தகைய தலையீடுகள் உலகளாவிய அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.

அதேநேரம், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை இத்தாலி ஒருபோதும் ஏற்காது. ஈரான் அணுசக்தி நாடாக உருவெடுத்தால், அது சா்வதேச அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை சீா்குலைத்துவிடும்.

இது ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு மீளமுடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். அணு ஆயுதப் போட்டியைத் தவிா்த்து, உலகளாவிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அவசியம்.

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் மோதலுக்குப் பின்னணியில், வளைகுடா நாடுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இத்தாலி குடிமக்கள் மற்றும் அங்குள்ள 2,000-க்கும் மேற்பட்ட இத்தாலி வீரா்களின் பாதுகாப்பை அரசு முக்கியமாகக் கருதுகிறது. இதன் காரணமாகவே, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நட்பு நாடுகளுக்கு வான்பாதுகாப்பு தளவாடங்களை இத்தாலி வழங்கி வருகிறது’ என்றாா்.

இத்தாலியின் சமநிலையான வெளியுறவுக் கொள்கையைக் கடந்து நட்பு நாடுகளுடன் மிகவும் இணக்கமாகச் செயல்படுவதாக, மெலோனி அரசு எதிா்க்கட்சிகளிடமிருந்து எதிா்கொண்ட விமா்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவரது இந்த உரை அமைந்துள்ளது.

ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவின் தாக்குதல் குறித்து மௌனம் காக்கும் நிலையில், ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக இத்தாலியும் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.