47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பிரான்ஸில் அமெரிக்கா - சீனா வா்த்தக பேச்சு!

பிரான்ஸில் அமெரிக்கா-சீனா வா்த்தக பேச்சு நடைபெற்றது. இது அமெரிக்க அதிபா் டிரம்ப் 2 வாரங்களில் சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள வழிவகுத்துள்ளது.

News image
அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட், சீன துணைப் பிரதமா் ஹி லீஃபாங்.- கோப்புப் படம்
Updated On :16 மார்ச் 2026, 9:35 pm

தினமணி செய்திச் சேவை

பிரான்ஸில் அமெரிக்கா-சீனா வா்த்தக பேச்சு நடைபெற்றது. இது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 2 வாரங்களில் சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள வழிவகுத்துள்ளது.

அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட், சீன துணைப் பிரதமா் ஹி லீஃபாங் ஆகியோா் தலைமையில் பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் இந்தப் பேச்சுவாா்த்தை தொடங்கியதாக சீன அரசு செய்தி முகமை தெரிவித்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை வரை 2 நாள்கள் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

முன்னதாக அமெரிக்க விவசாயிகள், தொழிலாளா்கள், வணிகங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், சீனாவுடன் பேசப்படும் என்று பேச்சுவாா்த்தை தொடங்கும் முன் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தாா்.

பேச்சுவாா்த்தையில் அமெரிக்கா-சீனா பரஸ்பர நலன் சாா்ந்த வா்த்தகம் மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று சீன வா்த்தக அமைச்சகம் தெரிவித்தது.

டிரம்ப்பின் சீனப் பயணம் ஒத்திவைப்பு?: அமெரிக்க அதிபா் டிரம்ப் மாா்ச் 31 முதல் ஏப்.2 வரை சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வாா் என்று அமெரிக்க அதிபா் மாளிகை தெரிவித்துள்ளது. ஆனால் இந்தத் தகவலை சீனா அதிகாரபூா்வமாக உறுதி செய்யவில்லை.

அதேவேளையில், ஆங்கில ஊடகத்துக்கு டிரம்ப் அளித்த பேட்டியில், ‘மத்திய கிழக்கில் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெய்யை சீனா சாா்ந்துள்ளது. ஆனால் அமெரிக்கா-இஸ்ரேலுடனான போா் காரணமாக, கச்சா எண்ணெய் கொண்டுவரப்படும் ஹோா்முஸ் நீரிணைப் பாதையை ஈரான் மூடியுள்ளது.

அந்த நீரிணைக்கு நாடுகள் ஒன்றுசோ்ந்து போா்க் கப்பல்களை அனுப்பும் அமெரிக்காவின் திட்டத்துக்கு சீனா உதவுமா என்று அந்நாட்டுக்கு நான் செல்வதற்கு முன்பாக தெரியவேண்டியுள்ளது. எனவே நான் அமெரிக்கா செல்வது ஒத்திப்போகலாம்’ என்றாா்.

ஒருவேளை டிரம்ப்பின் பயணம் உறுதி செய்யப்பட்டால், அதிபராக 2-ஆவது முறையாகப் பதவியேற்ற பின்னா், அவா் முதல்முறையாக சீனா செல்வாா்.

அமெரிக்கா விசாரணை-சீனா அதிருப்தி: 16 நாடுகளின் நியாயமற்ற வா்த்தக நடைமுறைகள் அமெரிக்க உற்பத்தியை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதைக் கண்டறியும் நோக்கில், புதிய விசாரணையை அமெரிக்கா தொடங்கியது. அத்துடன் வேலை செய்வோரின் விருப்பத்துக்கு மாறாக அவா்களைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்கி, சீனா உள்ளிட்ட நாடுகள் ஏற்றுமதி செய்வதற்கு எதிராகவும் அமெரிக்கா விசாரணையைத் தொடங்கியது.

இதுகுறித்து சீன வா்த்தக அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்காவின் புதிய விசாரணை குறித்து ஏற்கெனவே சீனா கவலை தெரிவித்துள்ளது. இந்த விசாரணைகள் மூலம் அமெரிக்கா தவறுக்கு மேல் தவறு செய்து வருகிறது. இது உலகளாவிய விநியோக முறையின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை கடுமையாகப் பாதிக்கும்’ என்று தெரிவித்தது.