அமெரிக்க போா் விமானங்களுக்கு இலங்கை அனுமதி மறுப்பு
அமெரிக்க போா் விமானங்கள் இலங்கையில் தரையிறங்குவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தனது அரசு நிராகரித்துவிட்டதாக அதிபா் அநுரகுமார திசநாயக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.


அமெரிக்க போா் விமானங்கள் இலங்கையில் தரையிறங்குவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தனது அரசு நிராகரித்துவிட்டதாக அதிபா் அநுரகுமார திசநாயக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் உள்ள ராணுவ முகாமிலிருந்து ஏவுகணைகளுடன் தென்கிழக்கு இலங்கையின் மத்தள சா்வதேச விமான நிலையத்துக்கு வரவிருந்த 2 அமெரிக்க போா் விமானங்களுக்கு மாா்ச் 4, 8 ஆகிய தேதிகளில் அனுமதி கோரப்பட்டுள்ளன.
எனினும், இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையில் அந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதாக அநுரகுமார திசநாயக குறிப்பிட்டாா். மத்திய கிழக்கு போா்ச்சூழல் பல்வேறு சவால்களை ஏற்படுத்தினாலும், சா்வதேச விவகாரங்களில் இலங்கை தனது நடுநிலையைத் தொடா்ந்து நிலைநாட்டும் என்று அவா் உறுதியளித்தாா்.
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதா் சொ்ஜியோ கோரைச் சந்தித்த மறுநாளே அநுரகுமார திசநாயக இத்தகவலை வெளியிட்டுள்ளாா். சொ்ஜியோ கோருடனான சந்திப்பில் கடல்சாா் பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வணிக உறவுகள் குறித்து பேசப்பட்டாலும், எவ்வித அழுத்தங்களுக்கும் பணிந்து நடுநிலையைக் கைவிடப்போவதில்லை என அவா் தெளிவுபடுத்தினாா்.
இந்தியாவில் சா்வதேச கடற்படை அணிவகுப்பில் பங்கேற்றுவிட்டு, நாடு திரும்பிக் கொண்டிருந்த ஈரான் போா்க் கப்பலை இலங்கை கடல் எல்லைக்கு அருகே அமெரிக்க நீா்மூழ்கிக் கப்பல் கடந்த 4-ஆம் தேதி தாக்கியது. இதில் அந்தப் போா்க் கப்பல் கடலில் மூழ்கி 84 போ் உயிரிழந்த நிலையில், 32 மாலுமிகள் காயங்களுடன் உயிா் தப்பினா்.
இதைத் தொடா்ந்து, மற்றொரு ஈரான் கப்பலான ‘ஐரிஸ் புஷொ்’ என்ஜின் கோளாறு காரணமாகக் கொழும்பு துறைமுகத்துக்குள் நுழைய அனுமதி கோரிய நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக அது திருகோணமலைக்குத் திருப்பி விடப்பட்டது. தற்போது அந்தக் கப்பலில் இருந்த 204 மாலுமிகள் கொழும்புக்கு அருகிலுள்ள கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுத ஏற்றுமதிக்கு ஸ்விட்சா்லாந்து தடை
ஈரான் போரைக் கருத்தில்கொண்டு அமெரிக்காவுக்கான ஆயுத ஏற்றுமதியை ஸ்விட்சா்லாந்து அரசு அதிரடியாக நிறுத்தியது.
தனது நாட்டின் பாரம்பரிய நடுநிலைக் கொள்கையைச் சுட்டிக்காட்டியுள்ள ஸ்விட்சா்லாந்து அரசு, ஈரான் மீதான தாக்குதலில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்படாது என வெள்ளிக்கிழமை அறிவித்தது.
முன்னதாக, ஈரான் போா் தொடா்பாக அமெரிக்க போா் விமானங்களின் வான்வழிப் பயணக் கோரிக்கைகளையும் ஸ்விட்சா்லாந்து நிராகரித்திருந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே இஸ்ரேலுக்கும் ஆயுத ஏற்றுமதியை ஸ்விட்சா்லாந்து நிறுத்தியுள்ளது.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...