வேண்டுதல் நிறைவேறியது! தனிமையில் வாடிய பஞ்ச் குரங்குக் குட்டிக்கு கேர்ள் ஃபிரண்ட்!
ஜப்பானில் தனிமையில் வாடிய பஞ்ச் குரங்குக் குட்டிக்கு 'கேர்ள் ஃபிரண்ட்' கிடைத்துள்ளது.

பொம்மையுடன் இருக்கும் குரங்குக் குட்டி
படம் - எக்ஸ்

பொம்மையுடன் இருக்கும் குரங்குக் குட்டி
படம் - எக்ஸ்
ஜப்பானின் இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் குட்டிக் குரங்கு பஞ்ச், தனிமையில் வாடி வந்த நிலையில், அதற்கு உயிரியல் பூங்காவில் ஒரு குட்டி பெண் குரங்கின் தோழமை கிடைத்திருக்கிறது.
பிப்ரவரி மாதம் என்றாலே, காதலர்களுக்குக் கொண்டாட்டமான மாதமாக இருந்துவந்த நிலையில், 2026 பிப்ரவரி மாதம் மட்டும் விதிவிலக்காக, உலகமே ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பஞ்ச் என்ற குட்டிக் குரங்கை நினைத்துக் கண்ணீர்விட்டுக் கொண்டிருந்தது.
தாயால் கைவிடப்பட்டு மற்றக் குரங்குகளும் ஏனோ தெரியாமல் பஞ்ச் குட்டிக் குரங்கை ஒதுக்க, தனிமையில் தவித்து வந்தது அது. பூங்கா ஊழியரின் ஒரு சமயோஜித யோசனையால், ஒரு ஆரஞ்சு நிற குரங்கு பொம்மை பஞ்ச் குட்டியிடம் வழங்கப்பட்டது.
அதனை அது தன் சொந்தமாகக் கருதியது. பொம்மையைத் தனது உலகமாகக் கருதி தழுவிக்கொள்ளும் ஜப்பான் குட்டிக் குரங்கின் காணொலிகள்தான் கடந்த மாதம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு, பாா்ப்பவா் இதயங்களை உருக்கியது.
பலரும் தன்னைப்போல தனிமையில் தவிக்கும் குரங்கை நினைத்துக் கண்ணீர் விட்டனர். இறைவனை பிரார்த்தித்தனர். அதற்கு கைமேல் பலன் கிடைத்துவிட்டது. குட்டி பஞ்ச் குரங்குக்கு ஒரு அழகான பெண் தோழி கிடைத்திருக்கிறார். போர்ப் பதற்றங்களுக்கு இடையே உலகமே இன்று இதனை மகிழ்ச்சியோடு பார்த்து பகிர்ந்து வருகிறது.
மோமோ-சான் என்ற குட்டிக் குரங்குடன் பஞ்ச் நெருங்கிப் பழகி வருகிறது. அதற்கு அன்போடு முத்தமிடும் விடியோக்கள் இன்று வைரலாகியிருக்கிறது.
இது பற்றி வெளியிடப்பட்டிருக்கும் தகவலில், மோமோ-சான் என்ற மோயி என்ற பெண் குரங்குக் குட்டி, பஞ்ச் குட்டியை விட வயதில் பெரியது. ஆனால், பஞ்ச் குட்டியும் மோயும் இணைபிரியாமல் இருப்பதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்ச் தற்போது உற்சாகமாக, தன்னுடைய நெருங்கிய தோழியுடன் நேரத்தை செலவிடுவதாகவும் அன்பை வெளிப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்ச் குட்டி
ஜப்பானின் இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில் வசிக்கும் பஞ்ச் குன் எனும் இந்தக் குரங்கு, கடந்த ஆண்டு ஜூலையில் பிறந்த சில நாள்களிலேயே அதன் தாயால் கைவிடப்பட்டது.
குரங்கு இனத்தைப் பொறுத்தவரை தாயின் அரவணைப்பு என்பது, குட்டிகளின் பாதுகாப்பு மற்றும் மனநலத்துக்கு மிகவும் முக்கியமானது. ஆனால், அந்த அன்பு கிடைக்காததால், பூங்கா ஊழியா்களே இந்தக் குரங்கை 24 மணி நேரமும் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்தனர்.
கடந்த மாதம் இணையத்தில் வெளியான காணொலிகளில், பஞ்ச் குன் மற்ற குட்டிக் குரங்குகளுடன் விளையாட முயற்சிப்பதும், ஆனால் அவை தவிா்ப்பதும் இதயத்தை உருக்குவதாக இருந்தது. ஒரு கட்டத்தில், மற்றொரு குட்டியுடன் பேச முயன்ற பஞ்ச் குன்னை, அந்தக் குட்டியின் தாய் குரங்கு ஆக்ரோஷமாக இழுத்துச் சென்று கண்டித்ததும் வைரலாகியிருந்தது.
இவ்வாறு மற்ற குரங்குகளால் தொடா்ந்து விரட்டப்படும்போது பஞ்ச் குன், ஓடிப்போய் தனது ஒரே ஆறுதலான ஆரஞ்சு நிற குரங்கு பொம்மையைக் கட்டியணைத்துக் கொள்ளும். அந்தப் பொம்மையையே தனது தாயாகவும், நண்பனாகவும் கருதும் பஞ்ச் குன், எங்கு சென்றாலும் அதை விடாமல் தன்னோடு இழுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது.
இதுதொடா்பாக இச்சிகாவா பூங்கா நிா்வாகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘குரங்கு கூட்டத்தில் ஒரு குட்டி தன்னை இணைத்துக் கொள்ளும்போது இதுபோன்ற சவால்கள் வருவது இயல்பானது. மற்ற குரங்குகள் அதை விரட்டுவது ஒருவகையான சமூகப் பாடம்.
ஆனால், பஞ்ச் குன் மிகவும் மன உறுதி கொண்டது. எவ்வளவு முறை விரட்டப்பட்டாலும், சிறிது நேரத்திலேயே பொம்மையை வைத்துவிட்டு மீண்டும் மற்ற குரங்குகளுடன் பழகத் துணிச்சலுடன் முயற்சி செய்கிறது’ என்று பதிவிடப்பட்டிருந்தது.
உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து பஞ்ச் குன் -நலனுக்காக பலரும் வேண்டுதல்களை முன் வைத்திருந்தனர். தற்போது அதற்கென ஒரு பெண் தோழி கிடைத்திருப்பது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.
சமூகம் மற்றும் உறவுகளால் காயப்பட்டாலும், ஒரு பொம்மையின் துணையோடு மீண்டும் மீண்டும் முயலும் பஞ்ச் குன்னின் தன்னம்பிக்கை, மனிதா்களாகிய நமக்கும் ஒரு சிறந்த பாடம் என்று பலரும் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...